Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம்

மூன்று நிஷ்டைகளின் அடையாளங்கள் உள்ளதை அறிவதால் என்ன பலன்

மூலம் – இப்படி அவ்வோ அடையாளங்களாலே அஹமாத்மா ந தேஹ: அஸ்மி விஷ்ணுசேஷ: அபரிக்ரஹ: தமேவ சரணம் ப்ராப்த: தத்கைங்கர்ய சிகிர்ஷயா என்கிறபடியே மூலமந்த்ராதிகளைக் கொண்டு ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் தன்னுடைய நிஷ்டையை உணர்ந்து போரும் இவ்வதிகாரிக்கு நைஷா பச்யாதி ராக்ஷஸ்யோ நிமாந் புஷ்ப பலத்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமமேவாநுபச்யதி என்கிறபடியே விரோதியோடே கூடியிருக்கிற தனக்குப் பாக்ஷிகமாக ஸம்பாவிதமான ப்ரஹ்மவிதபசாராதி வ்யதிரிக்தங்களான ஏதேனுமொரு பீதிஹேதுக்களிலும் ஸ்வரூப ப்ராப்த கைங்கர்ய வ்யதிரிக்தங்களான ஏதேனுமொரு பீதிஹேதுங்களிலும் கண்ணோட்டம் உண்டாகாது. யத்ருச்சயா உண்டானாலும் அவற்றால் பீதியும் ப்ராப்தியும் உண்டாகாது.

– இப்படியாக நிஷ்டையின் அடையாளங்கள் தன்னிடம் உள்ளதை அறிந்து கொள்ளும் ப்ரபந்நன் ஒருவன் தனது ஸ்வரூபம், உபாயம், புருஷார்த்தம் ஆகியவற்றுக்கு ஏற்றபடியான ப்ரபந்நனின் நிலையில், தான் இருப்பதை உணர்ந்து கொள்கிறான். இதனை - அஹமாத்மா ந தேஹ: அஸ்மி விஷ்ணுசேஷ: அபரிக்ரஹ: தமேவ சரணம் ப்ராப்த: தத்கைங்கர்ய சிகிர்ஷயா – நான் ஆத்மா, சரீரம் அல்லன், எம்பெருமானுக்கு நான் அடிமை, எனக்கு அடிமை ஏதும் இல்லை, அவனுக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும் என்னும் ஆவல் காரணமாகவே அவனைச் சரணம் அடைந்துள்ளேன் – என்பதன் மூலம் அறியலாம். இப்படியாகத் தன்னிடம் நிஷ்டையின் அடையாளங்கள் உள்ளதை அறிந்து கொள்ளும் ப்ரபந்நன் ஒருவன், தனது புலன்கள் என்னும் விரோதிகளுடன் கூடி இருப்பதால் ப்ரஹ்மத்தை அறிந்தவர்களுக்குச் செய்யும் அபராதங்களைப் பற்றியும், தனது ஸ்வரூபத்திற்கு ஏற்றதான கைங்கர்யம் அல்லாதவற்றின் மூலம் கிட்டும் இன்பம் பற்றியும் மட்டுமே கவலைப்படுவான் அல்லாமல், வேறு எதனைப் பற்றியும் பயம் கொள்ள மாட்டான். இதனை இராமாயணம் ஸுந்தரகாண்டம் (16-25) - நைஷா பச்யாதி ராக்ஷஸ்யோ நிமாந் புஷ்ப பலத்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமமேவாநுபச்யதி – அசோக வனத்தில் இருந்த சீதை அரக்கிகளைக் காண்பதில்லை, மலர்களும் பழங்களும் உள்ள மரங்களைக் காண்பதில்லை, இராமனிடம் மட்டுமே மனதை வைத்தவளாக, அவனை மட்டுமே பார்த்தபடி உள்ளாள் என்பது நிச்சயம் – என்பதில் காணலாம். இவற்றைத் தவிர மற்ற ஏதேனும் இவன் முன்பாகத் தோன்றினாலும், அவற்றைக் குறித்து அச்சமோ, வருத்தமோ கொள்ளமாட்டான்.