Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம்
புருஷார்த்த நிஷ்டையின் அடையாளங்கள்
மூலம் - இப்படிக் கர்மவிசேஷாதீநமாக வருகிற ப்ராப்யாந்தர லாபாலாபங்களில் தயோரேகதரோ ராசிர்யத்யேநமுபஸந்நமேத் ந ஸுகம் ப்ராப்யம் ஸம்ஹ்ருஷ்யேத் ந துக்கம் ப்ராப்ய ஸம்ஜ்வரேத் என்றும், “உளதென்றிறுமாவார்” என்றும் சொல்லுகிறபடியே ஹர்ஷசோகங்களற்று ஸ்வரூபாநுரூபமான பரம ப்ராப்ய கைங்கர்யத்திலே ருசியும், ஸ்தோத்ரத்திலும் ஸ்ரீவைகுண்டகத்யாதிகளிலும் “கடாகடா” என்று வாய் புலற்றப் பண்ணுகிற ப்ராப்தியில் த்வரையும் நடையாடிற்றாகில் – திருமந்த்ரத்தில் நாராயண சப்தத்தில் சதுர்த்தியாலும், த்வயத்தில் சதுர்த்தீ நமஸ்ஸுக்களாலும், சரமச்லோகத்தில் அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற வாக்யத்தாலும் கடலைக் கையிட்டுக் காட்டுமாப்போலே காட்டப்பட்ட அபரிச்சேதமான பரம புருஷார்த்தத்திலே நிஷ்டையுண்டென்று அறியாலாம்.
– புருஷார்த்த நிஷ்டை அடைந்த ப்ரபந்நன் ஒருவன் மோக்ஷம் அல்லாத ஒன்றை அடைய நேரிட்டால் மகிழ்வோ, அடையாவிட்டால் வருத்தமோ கொள்ளமாட்டான். இதனைக் கீழே உள்ளவற்றின் மூலம் அறியலாம். மஹாபாரதம் சாந்திபர்வம் (175-5) - தயோரேகதரோ ராசிர்யத்யேநமுபஸந்நமேத் ந ஸுகம் ப்ராப்யம் ஸம்ஹ்ருஷ்யேத் ந துக்கம் ப்ராப்ய ஸம்ஜ்வரேத் – சுக துக்கங்களில் எஹொ ஒன்று வரும்போது, சுகத்தைக் கண்டு மகிழ்வோ, துன்பத்தைக் கண்டு துக்கமோ அடையக் கூடாது – என்றும், இரண்டாம் திருவந்தாதி (45) – உளதென்றிறுமாவார் – ஸர்வேச்வரனின் திருவடிகளைப் பணிந்தவர்கள் செல்வத்தை கண்டு கர்வமோ வருத்தமோ கொள்ளமாட்டனர் – என்றும் கூறியது காண்க. மாறாக, இப்படிப்பட்டவன் மற்ற விஷயங்களைக் குறித்து இன்பமோ துன்பமோ கொள்ளாமல், தன்னுடைய ஸ்வரூபத்திற்கு ஏற்றதும் புருஷார்த்தமும் ஆகிய ஸர்வேச்வரனின் கைங்கர்யம் என்பதிலேயே ஆசை உள்ளவனாக இருப்பான். இப்படிப்பட்டவன் ஸ்தோத்ர ரத்னத்திலும், ஸ்ரீவைகுண்டகத்யத்திலும் கூறியபடி, “எப்போது நான் நாராயணனை அடைவேன்?” என்று புலம்பியபடி, அந்த நாளை எதிர்நோக்கியபடியும் இருப்பான். இப்படியாக ஒருவன் இருந்தான் என்றால், அவன் மனம் மிகவும் உயர்ந்த புருஷார்த்தத்தில் நிலைநிற்கிறது என்பதைப் பெரிய கடல் ஒன்றைக் கையால் சுட்டிக் காட்ட இயல்வது போன்று, கீழே உள்ளவற்றின் மூலம் அறியலாம்: திருமந்த்ரத்தில் உள்ள நாராயணாய என்பதன் நான்காம் வேற்றுமை, த்வயத்தில் உள்ள நம:, சரமச்லோகத்தில் உள்ள அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்பவற்றின் மூலம் அறியலாம்.