Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம் (பத்தி 3)
அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம்
உபாய நிஷ்டையின் அடையாளங்கள்
மூலம் – (1) ஸர்வேச்வரனையொழியத் தானும் பிறரும் தனக்குத் தஞ்சமென்று என்கிற புத்தியும். (2) ம்ருத்யுபர்யந்தமான பயஹேதுக்களைக் கண்டாலும், ப்ராயோணா க்ருதக்ருத்யத்வாத் ம்ருத்யோருத்விஜதே ஜந: க்ருதக்ருத்யா: ப்ரதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதிம் என்கிறபடியே இச்சரீராநந்தரம் என்படப் புகுகிறோம் என்கிற கரைதலற்று அபிமத ஆஸக்தியாலே ப்ரீதனாயிருக்கையும், (3) கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வ்யாக்ரம் வா அபி வராநநா நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூ ராமஸ்ய ஸம்ச்ரிதா என்றும் அஸந்தேசாத்து ராமஸ்ய தபஸச்வாநுபாலநாத் ந த்வா குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹ தேஜஸா என்றும் சரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத்யாதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருசம் பவேத் என்றும் பிராட்டி நடத்திக்காட்டின ரக்ஷக அவஷ்டம்பத்தாலுள்ள தேற்றமும். (4) தான் பரந்யாஸம் பண்ணின விஷயத்தில் ஸ்வயத்நமற்றிருக்கையும். (5) அதில் அநிஷ்டநிவ்ருத்தியும் இஷ்டப்ராப்தியும் அவன் கையதே என்றிருக்கையும் உண்டாயிற்றாகில். தான் கோலின ஸகலபலத்துக்கும் ஸாதநமாகவற்றாய், சரமச்லோகத்தில் பூர்வார்த்தத்திலே விஹிதமாய், த்வயத்தில் பூர்வகண்டத்தில் அநுஸந்தேயமாய், திருமந்த்ரத்தில் மத்யமபதத்திலும் விவக்ஷிதமான உபாயத்திலே தனக்கு நிஷ்டையுண்டென்று அறியலாம்.
– கீழே உள்ள பல தன்மைகள் தன்னிடம் உள்ளது என்று உணர்ந்தால், உபாயத்தைக் குறித்த ஞானம் தன்னிடம் உள்ளது என்று ப்ரபந்நன் அறியலாம். 1. தனக்குத் தன் மூலமாகவோ, மற்றவர்கள் மூலமாகவோ எந்தவிதமான ரக்ஷகமும் இல்லை. தனது ரக்ஷகம் என்பதற்கு ஸர்வேச்வரனைத் தவிர வேரு யாராலும் அளிக்க இயலாது. 2. மரணம் உள்ளிட்ட பலவிதமானவற்றைக் குறித்து அச்சத்தை விளைவிக்கக் கூடிய காரணங்களைத் தெரிந்தவனாக இருந்தாலும், தனது நிலையைக் குறித்துக் கவலை கொள்ளாமல், தனது நிலை மாறாமல் வருத்தம் அடையாமல், தான் பெற விரும்பிய பலனை விரைவாக அடையப் போகிறோம் என்றே இருப்பான். இதனை இதிஹாஸ ஸமுச்சயம் (7-38) - ப்ராயோணா க்ருதக்ருத்யத்வாத் ம்ருத்யோருத்விஜதே ஜந: க்ருதக்ருத்யா: ப்ரதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதிம் – தங்கள் கடமையைச் செய்யாத மனிதர்கள், மரணத்தை எண்ணிப் பெரிதும் அச்சம் கொண்டபடி உள்ளனர்; தங்கள் கடமையான ப்ரபத்தியைச் செய்தவர்கள், மரணத்தைத் தங்கள் விருந்தாளி போன்று எதிர்பார்த்தபடி உள்ளனர் – என்றது காண்க. 3. தன்னைக் காப்பாற்றத் தகுந்த ஒருவன் கிட்டினான் என்ற நம்பிக்கையுடன் (விச்வாஸத்துடன்) இருப்பான். இதனை சீதையின் பல உதாரணங்களில் காணலாம். கீழே உள்ள வரிகள் காண்க: இராமாயணம் ஸுந்தர காண்டம் (60-20) - கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வ்யாக்ரம் வா அபி வராநநா நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூ ராமஸ்ய ஸம்ச்ரிதா – அழகான திருமுகம் கொண்ட சீதை, இராமனது தோள்களை எப்போதும் பற்றியுள்ளதால் யானை, சிங்கம், புலி ஆகியவற்றைக் கண்டு அஞ்சுவதில்லை. இராமாயணம் ஸுந்தர காண்டம் (22-20) - அஸந்தேசாத்து ராமஸ்ய தபஸச்வாநுபாலநாத் ந த்வா குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹ தேஜஸா – சாம்பலாக்கப்பட வேண்டிய இராவணனே! இராமனது கட்டளை எனக்கு இல்லை, பதிவ்ரதை என்னும் தவத்தை நான் காக்கவேண்டியதுள்ளது. இதனால்தான் உன்னை எனது தேஜஸ் மூலம் எரிக்கவில்லை. இராமாயணம் ஸுந்தர காண்டம் (39-30) - சரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத்யாதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருசம் பவேத் – விரோதியின் வலிமையை அழிக்கவல்ல இராமன், இலங்கையைத் தனது அம்புகளால் நிரப்பி, அதன் பின்னரே என்னை அழைத்துச் செல்லவேண்டும். இதுவே அவனுக்குப் பெருமை ஆகும். 4. தான் எந்தவிஷயத்திற்காக பரந்யாஸம் செய்தானோ, அந்த விஷயத்தைக் குறித்து வேறு சொந்த முயற்சிகளோ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த முயற்சிகளோ எடுக்கமாட்டான். 5. தனக்கு விருப்பம் அல்லாதவைத் தன்னைவிட்டு விலகுதலும், தனக்கு நன்மையை அளிக்கவல்லவைத் தன்னிடம் வந்து சேர்தலும் ஸர்வேச்வரனின் விருப்பத்தாலேயே கைகூடும் என்று இருப்பான். இந்தத் தன்மைகளை ஒருவன் கொண்டிருந்தான் என்றால், அவன் தான் விரும்பும் உபாயத்தில் நிலைநிற்கிறான் என்று அறியலாம். இந்த உபாயமே இவன் விரும்பும் அனைத்தையும் அளிக்கவல்லதாகிறது. இந்த உபாயமே சரமச்லோகத்திம் முதல் வரியிலும், த்வய மந்த்ரத்தில் முதல் பகுதியிலும், திருமந்த்ரத்தில் நடுப் பகுதியிலும் கூறப்படுவதாகும்.