Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம்
ஸ்வரூபநிஷ்டையின் அடையாளங்கள்
மூலம் – இப்படித் தனக்கு நிஷ்டையுண்டென்று தான் அறியும்படி எங்ஙனேயென்னில்: (1) பரராலே பரிபவாதிகளுண்டாம்போது தன் தேஹாதிகளைப் பற்றப் பரிபாவகர் சொல்லுகிற குற்றங்கள் தன் ஸ்வரூபத்தில் தட்டாதபடி விஷாதாதிகளற்றிருக்கையும். (2) சாப்யமாநஸ்ய யத் பாபம் சாபந்தமதிகச்சதி என்கிறபடியே பரிபவாதிகளாலே தன் பாபத்தை வாங்கிக் கொள்ளுகிற மதிகேடரைப் பற்ற பத்த வைராணி பூதாநி த்வேஷம் குர்வந்தி சேத்தத: சோச்யாந்யஹ: அதிமோஹேந வ்யாப்தாநீதி மநீஷிணா ஆத்மத்ருஹமமர்யாதம் மூடமுஞ்ஜித ஸத்பதம் ஸுதராமநுகம்பேத நரகார்ச்சிஷ்மாதிந்தநம் என்கிறபடியே கரைபுரண்ட க்ருபையும். (3) அமர்யாத: க்ஷுத்ர: என்கிற ச்லோகத்தாலும், “வாடினேன் வாடி” முதலான ஆழ்வார்கள் பாசுரங்களாலும் தனக்கு அநுஸந்தேயமாக உதாஹரித்த தோஷங்களைப் பரிவாதாதிகளாலே மறவாதபடி பண்ணினார்களென்கிற உபகாரஸ்ம்ருதியும். (4) ஆத்மாக்களுக்கெல்லாம் ஸ்வரூபாநுபந்தியான பகவத் பாரதந்த்ர்யத்தையும் க்ஷேத்ரஜ்ஞரெல்லாரும் கர்மவச்யராய் நிற்கிற நிலையையும் பார்த்து நமக்கும் நம்மளவில் பரிபவாதிகள் பண்ணுகிற சேதநருக்கும் உள்ள கர்மாநுகுணமாக இன்புறும் இவ்விளையாட்டுடையனான ஸ்வதந்த்ரசேஷியாலே ப்ரேரிதராய் அவர்கள் பரிவாதாதிகள் பண்ணுகிறார்களென்று அவர்கள் பக்கல் நிர்விகார சித்தத்தையும். (5) ப்ராப்த பாபவிசேஷம் சிகையறுக்கிறதென்கிற ஸந்தோஷமும் நடையாடிற்றாகில் ப்ரதம மத்யம பதங்களிலே சோதிதமானபடியே அசித்வைலக்ஷண்யத்தையும், ஸர்வபூதாநுகூல்யாதிகளுக்கு யோக்யமான ஜ்ஞானத்தையும், ஸர்வதோமுகமான ஆகிஞ்சன்யத்தையும், ஸ்வத: ஸர்வஸமனாய்க் கர்மாநுரூப பலப்ரதனான ஸ்வதந்த்ரசேஷிக்கு இஷ்டவிநியோகார்ஹமாம்படி அநந்யார்ஹ சேஷத்வ பாரதந்த்ர்யங்களையும், யத்திதம் மம தேவேச இத்யாதிகளிற்படியே பராதீந ஹிதஸித்தியையுமுடைய தன் ஸ்வரூபத்திலே நிஷ்டையுண்டென்று அறியலாம்.
– தன்னுடைய ஸ்வரூபம் குறித்த ஞானம் தனக்கு உள்ளது என்பதை ஒருவன் எவ்விதம் நம்புகிறான்? இதற்கான விடை கீழே உள்ளது. (1) தன்னை யாரேனும் அவமானம் செய்தால், அவ்விதம் அவமானப்படுத்துபவர்கள் தனது சரீரத்தையே அவமானம் செய்கிறார்கள் என்றும், தனது ஸ்வரூபத்திற்கும் இதற்கும் ஸம்பந்தமில்லை என்றும் எண்ணியபடி வருத்தம் போன்றவை இல்லாமல் இருப்பான். (2) மஹாபாரதம் ஆச்வமேதிக பர்வம் (110-34) - சாப்யமாநஸ்ய யத் பாபம் சாபந்தமதிகச்சதி – ஒருவனை ஒருவன் தகாத சொற்கள் குறித்து நிந்தனை செய்தால், அவமானப்பட்டவனின் பாவங்கள் அவமானம் செய்தவனைச் சென்றடையும் – என்று கூறுவது போன்று, தனது பாவங்களை வாங்கிக் கொள்ளும் புத்தி இல்லாதவர்கள் குறித்து இவன் கருணை கொள்கிறான். எப்படி என்றால் விஷ்ணுபுராணம் (1-17-81) - பத்த வைராணி பூதாநி த்வேஷம் குர்வந்தி சேத்தத: சோச்யாந்யஹ: அதிமோஹேந வ்யாப்தாநீதி மநீஷிணா – விலங்குகள் தன் மீது விரோதம் கொண்டு நின்றால், இவை இப்படி மோகத்தில் உள்ளனவே என்று அவற்றிடம் விவேகியாக உள்ள ஒருவன் இரக்கம் கொள்ளவேண்டும் – என்றும், ஆயுர்வேதம் - ஆத்மத்ருஹமமர்யாதம் மூடமுஞ்ஜித ஸத்பதம் ஸுதராமநுகம்பேத நரகார்ச்சிஷ்மாதிந்தநம் – யார் ஒருவன் சாஸ்த்ர வழிகளை மீறி தனக்கே துரோகம் செய்துகொள்கிறானோ, நல்ல வழியை விட்டு விலகி விறகு போன்று நிச்சயமாக நரகம் என்னும் தீயை வளர்த்துக் கொண்டு எரிய உள்ளானோ, அப்படிப்பட்ட மூடனை எண்ணி இரக்கம் கொள்ளவேண்டும் – என்றும் கூறப்பட்டபடி இரக்கம் கொள்ளுதல் வேண்டும். (3) ஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்னம் (62) – அமர்யாத: க்ஷுத்ர: - சாஸ்த்ர மரியாதைகளை மீறியவன் – என்றும், பெரியதிருமொழி (1-1-1) – வாடினேன் வாடி – என்றும் கூறுவதற்கு ஏற்ப, தன்னுடைய தோஷங்களை, தனக்குத் தீமை செய்பவர்கள் நினைவுபடுத்தினர் என்று எண்ணியபடி அவர்களிடம் உபகாரம் செய்தவர்கள் என்னும் நன்றியுடன் இருப்பான். (4) தனது ஸ்வரூப நிஷ்டையில் நிலைக்கும் ஒருவன் ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்ப, அனைத்து ஆத்மாக்களும் ஸர்வேச்வரனை அண்டியே உள்ளன என்று அறிவான். அனைத்து ஆத்மாக்களும் அதனதன் பூர்வகர்மங்களின் பலனில் சிக்கி உள்ளன என்று அறிவான். தன்னைத் தாழ்த்திப் பேசி, தன்னிடம் தோஷம் பாராட்டுபவர்கள் –ஸ்வதந்த்ரமானவனும், அனைவரின் எஜமானனும், தனக்கும் மற்றவர்களுக்கும் இடையே பூர்வகர்மம் காரணமாகப் பேதம் உண்டாவதைக் ஒரு லீலையாகவே கொண்டவனும் ஆகிய ஸர்வேச்வரனின் தூண்டுதல் காரணமாகவே இவ்விதம் செய்கிறார்கள் என்று அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களிடம் த்வேஷம் பாராட்டாமல் உள்ளான். (5) பலன் தரத் தொடங்கிவிட்ட பூர்வகர்மங்கள் குறித்து, அவை கழியத் தொடங்கி விட்டனவே என்று எண்ணி மகிழ்வான். இப்படியாக திருமந்த்ரத்தின் முதல் மற்றும் இரண்டாம் பதங்களின் (ப்ரணவம் மற்றும் நம) பொருளாக உள்ள பல அடையாளங்களை ஒருவன் பெற்றான் என்றால், அவன் கீழே உள்ள பலவற்றை அடைந்ததாகக் கொள்ளலாம் – சித் மற்றும் அசித் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு; அனைத்து உயிர்களுக்கும் நன்மை அளிக்கவல்ல செயல்களைச் செய்வதற்கான ஞானம்; மற்ற உபாயங்களை அனைத்தையும் கைவிட்ட நிலை; எம்பெருமானுக்காகவே வாழ்கின்ற தன்மை; அவனை மட்டுமே நம்பியுள்ள காரணத்தினால் அவனுக்கு மகிழ்வை உண்டாக்கும் செயலை மட்டுமே செய்தல்; அவன் யாருக்கும் பாரபக்ஷமாகச் செயல் புரிவதில்லை என்றும், அவரவர்களின் கர்மங்களுக்கு ஏற்ற பலனை அளிக்கிறான் என்றும், ஸ்வதந்த்ரமான எஜமானனாகிய அவனுக்காகவே அனைத்தும் உள்ளன என்றும், தன்னுடைய நன்மை என்பது அவன் மூலமாகவே விளைகிறது என்றும் அறிதல்.