Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம் (பத்தி 6)
அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம்
க்ருதக்ருத்யனின் இலக்கணம்
மூலம் – இவனுக்குப் ப்ரபத்திக்கு முன்புற்ற சோகம் அதிகாரத்திலே சொருகுகையாலே முன்பு சோகித்திலனாகில் அதிகாரியல்லாமையாலே காரணாபாவாத் கார்யபாவ: என்கிற ந்யாயத்தாலே உபாய நிஷ்பத்தி உண்டாகாது. உபாயஸ்வீகாரம் பண்ணினானாகத் தன்னை நினைத்திருந்த பின்பு சரண்யோக்தியிலே நெகிழ்ச்சி உடையவனாய் சோகித்தானாகில் கார்யபாவாத் ஸாமக்ரஞ்யபாவ: என்கிற ந்யாயத்தாலே பூர்ணோபாயனல்லாமையாலே பலம் உபாய பூர்த்தி ஸாபேக்ஷமாய்க் கொண்டு விலம்பிக்குமென்று அறியலாம். முன்பு ப்ரஸக்த சோகனாய்ப் பின்பு “மா சுச:” என்று ப்ரதிஷேகிக்கிறபடியே வீதசோகனானவன் க்ருதக்ருத்யனென்று அறியலாம்.
– ப்ரபத்திக்கு முன்பாக (ஸம்ஸாரத்தை எண்ணியும், தனது ஆத்மஸ்வரூபத்திற்கு விரோதமாக நடப்பது எண்ணியும் முதலானவை) வருத்தம் கொண்டவனாக இருத்தல் என்பதே ப்ரபத்தி செய்வதற்கான தகுதியை உண்டாக்குகிறது. இந்த வருத்தம் இல்லையென்றால், இவனுக்கு ப்ரபத்திக்கான தகுதி இல்லை என்றே கொள்ளவேண்டும். இவ்விதம் இல்லை என்றால் - காரணாபாவாத் கார்யபாவ: - காரணம் இல்லை என்றால் காரியம் இல்லை – என்னும் ந்யாயத்தின்படி ப்ரபத்தி பூர்த்தியாகாது. ப்ரபத்தி செய்த பின்னர், நம்பிக்கை உண்டாகாத காரணத்தினால், வருத்தத்தில் தொடர்ந்து ஆழ்ந்தபடி இருக்கக்கூடும். இதனால் - கார்யபாவாத் ஸாமக்ரஞ்யபாவ: - காரியம் உண்டாகவில்லை என்றால், காரணமும் இல்லை என்று பொருள் – என்னும் ந்யாயத்தின்படி, இவனது ப்ரபத்தி உபாயம் பூர்த்தியாகாது. இந்த ப்ரபத்தி உபாயம் பூர்த்தியாகும்வரையில், இதன் மூலமாகக் கிட்டவுள்ள பலனும் தள்ளியே செல்லும். யார் ஒருவன் ப்ரபத்திக்கு முன்பு வரை, வருத்தத்தில் ஆழ்ந்தவனாக இருந்து, ப்ரபத்திக்குப் பின்னர் ”மா சுச:” என்னும் பகவானின் சொற்களின்படி வருத்தம் இல்லாமல் வாழ்கிறானோ, அவனே க்ருதக்ருத்யன் ஆகிறான்.