Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம்

சரணாகதிகத்யத்திலிருந்து உதாரணம்

மூலம் – இவனுடைய இந்தக் க்ருதக்ருத்ய அநுஸந்தானத்தை அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத்ஜ்ஞாந தர்சன ப்ராப்திஷு நிச்சய: ஸுகமாஸ்ஸ்வ என்று சரணாகதிகத்யத்திலே நிகமித்தருளினார். இதுக்குக் கருத்து – அநாதிகாலம் அஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான பகவந்நிக்ரஹத்தாலே ஸம்ஸரித்துப்போந்த நமக்கு அவஸர ப்ரதீக்ஷை பகவத் க்ருபையடியாக உண்டான ஸாதாசார்ய கடாக்ஷ விஷயீகாரத்தாலே வந்த த்வயோச்சாரண அநுச்சாரணத்தாலே ப்ரபத்த்யநுஷ்டானம் பிறந்தபின்பு சரண்ய ப்ரஸாதநங்களில் இதுக்குமேல் ஒன்றில்லாமையாலே நிக்ரஹஹேதுக்களையெல்லாம் க்ஷமித்துத் தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஸர்வசேஷியான ஸ்ரீய:பதி தன் பேறாகத் தானே ரக்ஷிக்குமென்று தேறி நிர்பரனாயிரு – என்கை. இது “மா சுச:” என்கிற சரண்ய வாக்யத்திலும் தீர்ந்த பொருள்.

– இப்படிப்பட்ட க்ருதக்ருத்யன் தான் செய்யவேண்டியதைச் செய்துவிட்ட காரணத்தினால் அடையக்கூடியதை எம்பெருமானார் சரணாகதிகத்யத்தில் - அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத்ஜ்ஞாந தர்சன ப்ராப்திஷு நிச்சய: ஸுகமாஸ்ஸ்வ – எனவே நீ என்னை உள்ளபடி அறிவதிலும், காண்பதிலும், அடைவதிலும் எந்தவிதமான ஐயமும் கொள்ளாமல், இன்பமாக இருந்து வருவாயாக – என்று ஸ்ரீரங்கநாதன் திருவாய் மலர்கிறான். இதன் கருத்து பின்வருமாறு: எல்லையற்ற காலமாக எம்பெருமான் நமக்கு விதித்த கட்டளைகளை, நமது அறியாமை காரணமாக மீறி நடந்ததால், அவன் அளித்த தண்டனை காரணமாக நாம் ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ளோம். இப்படியாக உள்ள நம்மைக் கரையேற்றுவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எம்பெருமான் எதிர்நோக்கியே உள்ளான். அவனது கருணை காரணமாக நமக்கு ஆசார்யனின் கடாக்ஷம் கிட்டுகிறது. ஆசார்யன் மூலமாக த்வயத்தை அநுஸந்தானம் செய்வதன் மூலம் நாம் ப்ரபத்தியைக் கைக்கொள்கிறோம். நம்மைக் காப்பாற்றவல்ல எம்பெருமானை அடைய வேறு எதுவும் அவசியம் இல்லை. இதன் மூலமாக நமக்கு உண்டான தண்டனைகளுக்குக் காரணமான பாவங்கள் அனைத்தையும் அவன் அழித்துவிடுகிறான். பெரியபிராட்டியின் நாயகனான அவன், நம்மைத் தூய்மைப்படுத்தி, தனது கைங்கர்யத்திலும் ஈடுபடுத்திக் கொள்கிறான். இதனை அவன் தனது பேறாகவே எண்ணுகிறான். இப்படியாக அவன் நம்மைக் காப்பான் என்று எண்ணியபடி, ப்ரபந்நன் வருத்தங்கள் அற்று இருத்தல் வேண்டும். இந்தக் கருத்தே அபயம் அளிக்கக்கூடியவன் கீதையில் (18-66) கூறிய – மா சுச: - வருத்தம் கொள்ளாதே – என்பதன் பொருளாகும்.