Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம்
ப்ரபத்தியைச் செய்தவனை “செய்யவேண்டியதைச் செய்தவன்” என்று கூறுவது ஏன்
மூலம் – தேவர்ஷிபூதாத்மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந் ஸர்வாத்மநா ய: சரணம் சரண்யம் நாராயணம் லோககுரும் ப்ரபந்ந: என்கிற ச்லோகத்தின்படியே ப்ரஜாபதி பசுபதி என்றாற்போலே பேரிட்டுக் கொண்டிருக்கிற ஸஜாயதீயரான க்ஷேத்ரஜ்ஞரைப் பற்ற ஓரோர் அவஸரங்களிலே கைக்கூலி போலே சில உபாதிகளடியாக எழுதாமறையிலே ஏறிட்டுக் கிடக்கிற அடிமை தீட்டும் முதல் மாளாதே பொலிசையிட்டுப் போகிற தனிசுதீட்டும் கிழித்தவனாகையாலே பஞ்சமஹாயஜ்ஞாதிகளான நித்ய நைமித்திகங்களில் அவர்கள் பேர் சொல்லும்போது யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந் ஸர்வபூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே இத்யாதிகளில் மஹர்ஷிகள் அறுதியிட்டபடியே ராஜஸேவகர் ராஜாவுக்குச் சட்டை மேலே மாலையையும் ஆபரணத்தையும் இட்டாலும் சட்டையில் துவக்கற்று ராஜாவின் ப்ரீதியே ப்ரயோஜநமாகத் தெளிந்திருக்குமாப்போலவும், யஜ்ஞ அக்ரஹர அத்யாயாதிகளிலும் ஸ்ரீஹஸ்திகிரிமஹாத்ம்யத்திலும் ஸாக்ஷாதர்ப்யாவரோதம் ஜைமிநி: என்கிற ஸூத்திரத்திலும் சொல்லுகிறபடியே தேவர்கள் பித்ருக்கள் என்கிற சட்டைகளோடு துவக்கற அவ்வோ சப்தங்கள் அவயவ சக்தி பௌஷ்கல்யங்களாலே ஈச்வரன் பக்கலிலே நாராயணாதிசப்தங்கள் போலே நிற்கிற நிலையையுங்கண்டு, அவற்றினுடைய உச்சாரணாதிகளில் ச்வேததீபவாஸிகளான சுத்தயஜாதிகளுக்குப் போலே தன் பரமைகாந்தித்வம் குறையாதே நிற்கிறபடியை நிரூபித்துத் தன் வர்ண ஆச்ரம நிமித்த குணாத்யதிகாரத்துக்கு அநுரூபமாக அடிமை கொள்ள ஸங்கல்பித்திருக்கிற சாஸிதாவான சேஷியினுடைய சாஸ்த்ரவேத்ய ஆஜ்ஞாநுஜ்ஞா பரிபாலநரூப கைங்கர்ய முகத்தாலே ப்ரத்யக்ஷ விதித பரமபுருஷாபிப்ராயரான முக்தரைப்போலே கிஞ்சித்கரனாய்க் கொண்டு முக்ததுல்யனாய், உபாயபூர்த்தியாலே க்ருதக்ருத்யனென்றும், புருஷார்த்தபூர்த்தியாலே க்ருதார்த்தனென்றும் சாஸ்த்ரங்களாலும் தந்நிஷ்டராலும் கொண்டாடப்பட்டிருக்கும்.
– ஸ்ரீமத்பாகவதம் (11-5-41) - தேவர்ஷிபூதாத்மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந் ஸர்வாத்மநா ய: சரணம் சரண்யம் நாராயணம் லோககுரும் ப்ரபந்ந: - அனைவராலும் அடையத்தக்கவனும், அனைவருக்கும் ஆசார்யனாக உள்ளவனும் ஆகிய நாராயணனைச் சரணம் என அடைந்த ஒருவன் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், பித்ருக்கள் என யாருக்கும் அடிமையும் இல்லை, கடன்பட்டவனும் அல்லன் – என்றது காண்க. இவர்களைப் பொறுத்தவரையில் தங்கள் நித்ய, நைமித்திக கர்மங்களில் ப்ரஜாபதி, பசுபதி என்பது போன்ற, தங்களை ஒத்த ஜீவர்களின் பெயர்களை உச்சரிக்கக்கூடும். இவர்கள் தங்கள் வர்ணாச்ரம தர்மங்கள் என்னும் எழுதாத வேதங்களுக்குக் கடன்பட்டவர்களாக, அந்தக் கடனுக்குச் செலுத்தவேண்டிய வட்டி போன்று தேவர்கள், பித்ருக்கள் ஆகியவர்களுக்குத் தொண்டு செய்யவேண்டியதாகிறது. ஆனால், ப்ரபத்தி செய்தவனுக்கு அந்தக் கடன்சீட்டு கிழிக்கப்பட்ட ஒன்றாகிறது. ஆகவே இப்படிப்பட்ட ஒருவன் பஞ்சமஹாயஜ்ஞங்களான நித்ய, நைமித்திக கர்மங்களில் இவர்களில் பெயரை உச்சரிக்கக்கூடும் (பஞ்ச மஹாயஜ்ஞங்கள் = தேயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், பூதயஜ்ஞம், மநுஷ்யயஜ்ஞம் மற்றும் ப்ரஹ்மயஜ்ஞம்). இவ்விதம் மற்றவர்களின் பெயர்களை உச்சரித்தாலும், அவை ஈச்வரனையே குறிப்பிடுகின்றன என அறிகிறான். இதனை மஹாபாரதம் சாந்திபர்வம் (355-41) - யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந் ஸர்வபூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே – பித்ருக்கள், தேவர்கள், அந்தணர்கள் மற்றும் அக்னியை ஆராதனை செய்பவர்கள் அனைத்து உயிர்களின் ஆத்மாவான எம்பெருமானையே ஆராதனை செய்கிறார்கள் – என்றது காண்க. அரசனின் வேலையாட்கள் அரசனின் சட்டை மீது மாலை மற்றும் ஆபரணங்கள் அணிவித்த காரணத்தால், அவர்கள் சட்டைக்கு மரியாதை செய்கின்றனர் என்பதல்ல, அதனுள் உள்ள அரசனுக்கே அவற்றைச் செய்கின்றனர் அல்லவோ? இதே கருத்து மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் உள்ள யஜ்ஞ அக்ரஹரத்திலும், ஸ்ரீஹஸ்திகிரிமஹாத்ம்யத்திலும், ப்ரஹ்மஸூச்த்ரம் (1-2-29) - ஸாக்ஷாதர்ப்யாவரோதம் ஜைமிநி: - அக்னி போன்ற சொற்கள் எம்பெருமானையே குறிப்பதால் விரோதமில்லை என்று ஜைமிநி கூறிகிறார் – என்பது போன்ற சூத்திரங்களிலும் உள்ளது. தேவர்கள், பித்ருக்கள் என்னும் சொற்கள், எம்பெருமானின் சட்டை போன்ற தேவர்கள், பித்ருக்கள் என்பதைக் குறிக்கவில்லை. அவை நாராயணன் என்னும் பதம் போன்று ஈச்வரனையே குறிப்பதாக உள்ளன. ச்வேத த்வீபத்தில் உள்ளவர்களுக்கு நாராயணன் என்ற திருநாமத்தை உச்சரிக்கும்போது “நார” என்ற சப்தம் உண்டானாலும், அவன் மீது மட்டுமே உள்ள உறுதியான பக்தி எப்படி மாறாமல் உள்ளதோ, அது போன்று, ப்ரபந்நன் தனது கர்மங்களின் பொருட்டு உச்சரிக்கும் ப்ரஜாபதி, பசுபதி போன்றவைகளால் எந்த தோஷமும் பெறுவதில்லை. ஒவ்வொருவரின் வர்ணாச்ரம தர்மங்களுக்கு ஏற்ப, அவரவர்களைத் தனது சேவகனாக எம்பெருமான் மகிழ்வுடன் ஏற்க ஸங்கல்பம் செய்துள்ளான். ஆகவே சேஷியான அவனுக்குக் கைங்கர்யம் செய்தல் என்பது சாஸ்த்ரங்கள் மூலமாக அறியப்படுகின்ற, அவனால் விதிக்கப்பட்டவற்றைச் செய்தல் ஆகும். முக்தர்கள் எவ்விதம் நேரடியாகவே எம்பெருமானின் திருவுள்ளத்தை அறிந்துகொண்டு கைங்கர்யம் செய்கின்றனரோ, அது போன்று, ப்ரபந்நனும் சிறிதுசிறிதான கைங்கர்யங்களைச் செய்ய முயல்வான். இப்படிப்பட்டவன், சரியான உபாயத்தைக் கைக்கொண்டதால் ”க்ருதக்ருத்யன்” (செய்யவேண்டியதைச் செய்தவன்) என்றும், தான் அடைய வேண்டிய புருஷார்த்தத்தை அடைந்துவிட்டதால் “க்ருதார்த்தன்” என்றும் சாஸ்த்ரங்களால் புகழப்படுகிறான்.