Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம் (பத்தி 3)
அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம்
ப்ரபத்தியைச் செய்தவனை “செய்யவேண்டியதைச் செய்தவன்” என்று கூறுவது ஏன்
மூலம் - “மாமேகம் சரணம் வ்ரஜ” என்கிறபடியே ஸித்தோபாயத்வேந ஸ்வீக்ருதனான ஸர்வேச்வரன், “அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று பலப்ரதாந ஸங்கல்பத்தைப் பண்ணுகையாலே இப்படி விச்வஸநீயனுமாய் ஸமர்த்தனுமாய் உபாயபூதனுமான ஈச்வரனைப் பார்த்து பலஸித்தியில் நிஸ்ஸம்சயனுமாய், நிர்பயனுமாய், கடையேறவிட்ட அந்ய புருஷார்த்தங்களையும் காம்பறவிட்ட உபாயாந்தரங்களையும் அகிஞ்சநன் அயத்நமாக மஹாநிதியைப் பெறுமாப் போலே தான் பெறப்புகுகிற பரம புருஷார்த்தத்தையும் பார்த்து ஹஷ்டமநாவாய்;
– இப்படிப்பட்ட உபாயமாக உள்ள ஸர்வேச்வரன் கீதையில் – மாமேகம் சரணம் வ்ரஜ: - என்னை மட்டுமே சரணம் புகுவாயாக – என்றான். இதனால் கிட்டும் பலனைத் தானே அளிப்பதாக - அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – நான் உன்னை அனைத்துப் பாவங்களில் இருந்தும் காப்பாற்றுவேன் – என்று உறுதி அளிக்கிறான். இப்படியாக நம்பத்தகுந்தவனாக, எதனையும் செய்யவல்லவனாக, உபாயமாக உள்ளா ஸர்வேச்வரனைக் காணும் ப்ரபன்னன், தான் செய்த ப்ரபத்திக்கான பலன் குறித்து உள்ள ஐயங்களைக் கைவிடுகிறான்; தனது பயம் அனைத்தையும் துறக்கிறான்; மற்ற புருஷார்த்தங்களை அவற்றின் வாஸனையுடன் கைவிடுகிறான்; மற்ற உபாயங்களை அனைத்தையும் கைவிடுகிறான். மிகுந்த ஏழை ஒருவன், எந்தவிதமான பெரும் முயற்சியும் இல்லாமல் பெருஞ்செல்வம் கிட்டப்பெறுகிறான் என்னும்போது, அவனுக்கு ஏற்படும் ஆனந்தம் போன்று, ப்ரபன்னன் தான் அடையவுள்ள பரமபுருஷார்த்தத்தை எண்ணியபடி மகிழ்கிறான்.