Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம்

ப்ரபத்தியைச் செய்தவனை “செய்யவேண்டியதைச் செய்தவன்” என்று கூறுவது ஏன்

மூலம் – இவ்வுபாய விசேஷ நிஷ்டன் ப்ராப்திக்கு அநந்தரகாலம் தொடங்கித் தான் இதுக்குக் கோலின பலத்தைப் பற்றத் தனக்குக் கர்த்தவ்யாம்சத்தில் அந்வயமில்லா மையாலும் கர்த்தவ்யாம்சம் ஸக்ருதநுஷ்டானத்தாலே க்ருதமாகையாலும், ஸ்வதந்த்ரனாய் ஸத்ய ஸங்கல்பனான பலப்ரதன் “மா சுச:” என்று அருளிச் செய்கையாலும், தனக்குப் பிறந்த பரந்யாஸரூப தசையைப் பார்த்து நிர்பரனாய்;

– இப்படியாக ப்ரபத்தி என்னும் உபாயத்தைக் கைக்கொண்ட ஒருவன், இந்த உபாயத்தைக் கைக்கொண்ட நேரம் தொடக்கமாக, அதன் பலனைப் பெறுவதற்காக வேறு எதனையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இவன் என்ன செய்யவேண்டுமோ, அந்தச் செயல்கள் அனைத்தும் ஒருமுறை ப்ரபத்தி செய்ததிலேயே அடங்கிவிடுகிறது. சுதந்திரமாக உள்ளவனும், எடுத்த செயலை முடிப்பது என்ற விரதம் பூண்டவனும், ப்ரபத்தியின் பலனை அளிக்கவல்லவனும் ஆகிய ஸர்வேச்வரன் கீதையில் (18-66) – மா சுச: - கவலைப்படாதே – என்றான். இந்தக் காரணங்களால் ப்ரபன்னன், தனது பாரங்களை ஸமர்ப்பித்துவிட்டதை எண்ணியபடியே கவலையின்றி உள்ளான்.