Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 16)
அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்
அங்கங்களை ஒருமுறை செய்தல்
மூலம் – இவ்விடத்தில் ஆநுகூல்யஸங்கல்பாதிகள் உபாயபரிகரமாய் ஸக்ருத்தாயிருக்கும். மேல் இவன் கோலின அநுகூல வ்ருத்யாதிகளோடே போகிறவிடமும் உபாயபலமாய் யாவதாத்மபாவியாய் இருக்கும். இவற்றில் ப்ரதிகூல்யவர்ஜநமும் அம்மாள் அருளிச் செய்தபடியே ஆநுகூல்யஸங்கல்பம் போலே ஸங்கல்பரூபமானாலும் ஸக்ருத் கர்த்தவ்ய மென்னுமிடம் ஸ்பஷ்டம். அபாயேப்யோ நிவ்ருத்த: அஸ்மி என்கிறபடியே அபிஸந்தி விராமமாதல் ப்ராதிகூல்ய ஸ்வரூப நிவ்ருத்தியாதலானாலும் அதில் ப்ரதமக்ஷணம் அங்கமாய் மேலுள்ளது பலமாய்க்கடவது. இப்படி விச்வாஸத்திலும் பார்ப்பது. ப்ரவ்ருத்தி: அநுகூலேஷு நிவ்ருத்தி: ச அந்யத: பலம் ப்ராரப்த ஸுக்ருதாச்ச ஸ்யாத் ஸங்கல்பே ச ப்ரபத்தி:
– இவற்றில் எம்பெருமானுக்கு விருப்பம் அல்லாதவற்றைத் தள்ளுவதும், அவனுக்கு விருப்பமானவற்றைச் செய்தலும் என்ற உறுதிமொழியை உபாயத்தின் அங்கமாக ஒருமுறை எடுத்துக்கொண்டாலே போதுமானது. அதன் பின்னர் ஒருவன் விருப்பம் இல்லாதவற்றை விலக்கியபடி வாழ்வது போன்ற ஸங்கல்பங்கள், உபாயத்தின் பலனாக இவனுடைய ஆத்மா உள்ளவரை நீடிக்கும். நடாதூர் அம்மாள் சொற்களில் உள்ளபடி எம்பெருமானுக்கு விருப்பம் இல்லாதவற்றை விலக்குதல் என்பது, அந்தச் செயல்களைச் செய்யாமல் இருக்கும் உறுதியே என்று வைத்துக் கொண்டால், அந்த உறுதியை ப்ரபத்தியின்போது ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. லக்ஷ்மீ தந்த்ரம் (50-215) - அபாயேப்யோ நிவ்ருத்த: அஸ்மி – ஸம்ஸாரத்தில் தள்ளக்கூடிய பாவங்களில் இருந்து விலகினேன் – என்றது காண்க. விருப்பம் இல்லாதவற்றைத் தள்ளுதல் என்பது – அவற்றின் தொடர்பு இல்லாமல் இருத்தல், அவற்றைச் செய்யாமல் இருப்பது என்னும் உறுதி – ஆகிய இரண்டில் ஒன்றெனக் கொள்ளலாம். எப்படி இருப்பினும் இது ஓர் அங்கமே ஆகும். அதன் பின்னர், விருப்பம் இல்லாதவற்றை விலக்குதல் போன்றவை ப்ரபத்தின் பலனாகவே கொள்ளபடும். இதனையே விச்வாஸத்திலும் கொள்ளலாம். இதனை - ப்ரவ்ருத்தி: அநுகூலேஷு நிவ்ருத்தி: ச அந்யத: பலம் ப்ராரப்த ஸுக்ருதாச்ச ஸ்யாத் ஸங்கல்பே ச ப்ரபத்தி: - ப்ரபத்தியின் பின்னர், எம்பெருமானுக்கு விருப்பமானவற்றைச் செய்வதும், விருப்பம் இல்லாதவற்றைத் தள்ளுவதும் கடந்த பிறவிகளின் புண்யத்தாலும், ப்ரபத்தியின்போது எடுத்துக் கொள்ளும் ஸங்கல்பத்தாலும் ப்ரபத்தியின் பலனாக ஆகிறது.