Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 14)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

ஈச்வரன் பலனுக்கு உபாயமாதல்

மூலம் – ஈச்வரன் பலோபாயமாகிறது ஸஹஜஸௌஹார்த்தத்தாலே கரண களேபர ப்ரதாநம் தொடங்கி த்வயோச்சாரணபர்யந்தமாக ஸர்வத்துக்கும் ஆதிகாரணமான தானே ப்ரஸாதபூர்வக ஸங்கல்பவிசேஷ விசிஷ்டனாய்க் கொண்டு அவ்யவஹித காரணமாகையாலும் உபாயாந்தர சூந்யனுக்கு அவ்வோ உபாயஸ்தாநத்திலே நிவேசிக்கையாலும் இங்ஙனிருக்கைக்கடி தர்மி க்ராஹகமான சாஸ்த்ரத்தாலே அவகதமான வஸ்துஸ்வபாவமாகையால், இவ்வர்த்தம் யுக்திகளால் சலிப்பிக்க வொண்ணாது.

– எல்லையற்ற அன்பு காரணமாக மனிதர்களுக்கு உடல் மற்றும் உறுப்புகள் உண்டான காலம் தொடங்கி, அந்த மனித த்வய மந்த்ரத்தைக் கூறும் காலம் வரை அனைத்திற்கும் காரணமாகத் தானே நிற்கிறான்; மேலும் எம்பெருமான் ஸத்ய ஸங்கல்பனாகவும், தான் கொண்டுள்ள கருணையை வெளிப்படுத்தும் ஆசையுடனும் உள்ளான்; அவனே மோக்ஷத்திற்கான நேர்க்காரணமாகவும் உள்ளான்; மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள இயலாமல் தவிப்பவர்களுக்கு ஏற்ற உபாயமாகத் தானே நிற்கிறான். இத்தகைய ஆணித்தரமான கருத்துக்களை சாஸ்த்ரங்கள் மூலமாக வஸ்துவின் (பகவானின்) தன்மைகளைக் கொண்டு அறியலாம். சாஸ்த்ரங்கள் பகவானின் தன்மைகளைக் கூறும்போது, மேலே உள்ள தன்மைகளை கொண்ட வஸ்துவே பகவான் என்றும், இதனை வேறு எந்தவிதமான காரணங்களாலும் மறுக்க இயலாது என்றும் கூறுகின்றன.