Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 13)
அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்
ப்ரபத்தியில் உள்ள த்யாகங்களின் காரணம்
மூலம் – இக்கர்த்ருத்வத்யாகத்துக்கு நிபந்தனம் தன் கர்த்ருத்வமும் அவனடியாக வந்ததென்று தனக்கு யாவதாத்மபாவியான பகவதேக பார தந்த்ர்யத்தை அறிகை. மமதாத்யாகத்துக்கும் பலத்யாகத்துக்கும் நிபந்தனம் ஆத்மாத்மீயங்களுடைய ஸ்வரூபாநுபந்தி பகவதேக சேஷத்வஞானம். பலோபாயத்வ த்யாகத்துக்கு நிபந்தனம் சரண்ய ப்ரஸாதனமான இவனுடைய அநுஷ்டானம் ப்ரதாநபலத்துக்கு வ்யவஹித காரணமாகையும் அசேதநமாகையாலே பலப்ரதாந ஸங்கல்பாச்ரயமல்லாமையும்.
– “நாமே நமது செயல்களைச் செய்கிறோம்” என்ற எண்ணம், நமது ஆத்மா உள்ளவரை நாம் முழுவதுமாக எம்பெருமானையே சார்ந்து உள்ளோம் என்ற சிந்தனை உதயமாகும்போது நீங்கிவிடும். இதன் மூலம் ஒரு செயலைச் செய்யும் திறன் என்பது எம்பெருமான் நமக்கு அளித்தது என்ற ஞானம் உண்டாகிறது. மேலும் “என்னுடையது” என்ற எண்ணம், ப்ரபத்தியின் பலன் மீது விருப்பம் முதலானவை – தானும், தன்னைச் சார்ந்தவையும் எம்பெருமானுக்காகவே உள்ளோம் என்றும், அவனுடைய அடிமையாகவே நாம் உள்ளோம் என்றும் பிறக்கின்ற ஞானம் மூலம் நீங்கிவிடும். அடுத்து மோக்ஷ பலனை அளிக்கவல்ல உபாயத்தினையும் கைவிடவேண்டும். இந்தக் கைவிடுதல் என்பது – எம்பெருமானின் கருணையைப் பெறுவதற்காக ப்ரபத்தி செய்த ஒருவன், அந்த ப்ரபத்தி என்பது அசேதனமாக உள்ளதால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மோக்ஷ பலனை அளிக்கும் ஸங்கல்பம் கொண்டதல்ல என்றும், அந்தப் பலனை அளிக்கவல்ல உபாயமாக எம்பெருமானே உள்ளான் என்றும் அறிவதன் மூலம் உண்டாகும்.