Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 12)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தி முறை

மூலம் – இதில் ஸாங்காநுஷ்டாநமாயற்றது கர்த்ருத்வ த்யாக மமதா த்யாக பல த்யாக பலோபாயத்வ த்யாக பூர்வகமான ஆநுகூல்யஸங்கல்பாதி அர்த்தாநுஸந்தானத்தோடே குருபரம்பரோபஸத்திபூர்வக த்வயவசந முகத்தாலே ஸ்வரூப பல ந்யாஸ கர்மமான ஆத்மரக்ஷா பரஸமர்ப்பணம் பண்ணுகை.

– இந்த அங்கியை அதன் அங்கங்களுடன் அநுஷ்டிக்கும் முறை என்பது: தன்னைக் காப்பாற்றவேண்டும் என்னும் பொறுப்பை எம்பெருமானிடம் அளித்தல் என்பதற்கு முன்பாக கீழே உள்ளவற்றைப் பின்பற்ற வேண்டும் – தானே அனைத்தையும் செய்வதாக எண்ணுவதைக் கைவிட வேண்டும், ”எனது” என்று எண்ணுவதைக் கைவிட வேண்டும், பலன்களில் உள்ள பற்றுதல்களைக் கைவிட வேண்டும், தானாகவே பலனை விளைவிக்கக்கூடிய உபாயத்தைப் பின்பற்றுவதாக எண்ணுவதைக் கைவிட வேண்டும்; இதனைத் தொடர்ந்து ஆநுகூல்ய ஸங்கல்பம் (எம்பெருமானுக்கு ஏற்றவனாக நடப்பேன் என்னும் உறுதி) போன்றவற்றை அவற்றின் பொருளுடன் உணர்ந்து நிற்கவேண்டும்; தொடர்ந்து குருபரம்பரையை த்யானித்தபடி இருக்கவேண்டும்; த்வய மந்த்ரம் உச்சரிக்க வேண்டும். தன்னைக் காக்கவேண்டும் என்று பரஸமர்ப்பணம் செய்வதன் அடிப்படையில் தனது ஸ்வரூபத்தை அர்ப்பணிப்பதும், பரஸமர்ப்பணம் மூலம் கிட்டும் பலனை அர்ப்பணிப்பதும் உள்ளன என்று அறியவேண்டும்.