Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

ஸ்வரூபம் ஞானம் அற்றவர்களுக்கு ஆளவந்தாரின் தாத்பர்யம்

மூலம் – ஸ்தோத்ரத்தில் வபுராதிஷு யோ அபி கோ அபி வா குணத: அஸாநி யதாததாவித: ததயம் தவ பாதபத்மயோரஹமத்யைவ மயா ஸமர்ப்பித: என்கிறதுக்குத் தாத்பர்யமென்னென்னில் – முத்திரையிட்டிருக்கிற ராஜாவின் கிழிச்சீரை ஒரு ஹேதுவாலே தன் கையிலே இருந்தால் ராஜா கைக்கொள்ளுமென்று உள்ளிருக்கிற மாணிக்கத்தின் ஸ்வரூப ஸ்வபாவங்களை விசதமாக அறியாதே கிழிச்சீரையோடே மீளக்கொடுக்குமாப்போலே தேஹாத்யதிரிக்த ஆத்மாவின் ஸ்வரூப ஸ்வபாவ ஸ்திதிகளை விசதமாக விவேகிக்க அறியாதாரும் உள்ள அறிவைக் கொண்டு ஆத்மஸமர்ப்பணம் பண்ணினால் அவ்வளவாலும் அநாதிகாலம் பண்ணின ஆத்மாபஹார சைர்யத்தால் உண்டான பகவந்நிக்ரஹம் சமிக்குமென்கிற சாஸ்த்ரார்த்தத்திலே திருவுள்ளம்.

– ஆளவந்தாரின் ஸ்தோத்ரத்தில் (52) - வபுராதிஷு யோ அபி கோ அபி வா குணத: அஸாநி யதாததாவித: ததயம் தவ பாதபத்மயோரஹமத்யைவ மயா ஸமர்ப்பித: - சரீரம் போன்றவைகளில் நான் ஏதோவொன்றாக இருக்கக்கடவேன்; எனது குணங்களாலும் நான் எப்படிப்பட்டவனாகவாவது இருக்கக்கடவேன்; நான் உனது அடிமை என அறிவேன்; ஆகவே உனது இரண்டு தாமரை போன்ற திருவடிகளின் என்னை ஸமர்ப்பிக்கிறேன் – என்று உள்ளது காண்க. இதன் கருத்து என்ன? ஒருவன் தான் செல்லும் வழியில் அரசாங்க முத்திரையுடன் கூடிய மூட்டை ஒன்றைக் காண்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்த மூட்டைக்குள் இருக்கும் உயர்ந்த கற்கள் குறித்து அவன் அறியவில்லை என்றாலும், அந்த மூட்டையில் அரசாங்க முத்திரை உள்ளதால், அதனை அரசன் ஏற்றுக் கொள்வான் என்ற எண்ணத்துடன் அரசனிடம் கொடுக்க முற்படுவான் அல்லவா? இது போன்ற உடலைக் காட்டிலும் வேறுபட்டதான ஆத்மாவின் ஸ்வரூபம், ஸ்வபாவம், இருப்பு ஆகியவற்றை ஒருவன் அறியாதபோதிலும், தங்களுக்கு உள்ள அற்பமான அறிவு கொண்டு மட்டுமே தங்கள் ஆத்மாவை ஸர்வேச்வரனிடம் ஸமர்ப்பணம் செய்வர். இப்படிச் செய்த காரணத்தினாலேயே, எல்லையற்ற காலமாக ஆத்மாவை அபஹரித்த காரணத்தினால் பெறக்கூடிய தண்டனையை ஸர்வேச்வரன் தள்ளுகிறான் என்று அறியவேண்டும். சாஸ்த்ரங்களில் உள்ள இந்தக் கருத்தே ஆளவந்தாரின் திருவுள்ளத்தில் இருந்தது.