Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

ப்ரபத்தியின் பலனை அடைபவன் ஸர்வேச்வரனே

மூலம் – பலார்த்தியாய் உபாயாநுஷ்டானம் பண்ணுகிற ஜீவன் பலியாயிருக்க ஈச்வரன் இங்குப் ப்ரதாந பலியானபடி எங்ஙனேயென்னில் – அசித்தின் பரிணாமங்கள்போலே சித்துக்குத் தான் கொடுத்த புருஷார்த்தங்களும் ஸர்வசேஷியான தனக்கு உகப்பாயிருக்கையாலே ஈச்வரன் ப்ரதாந பலியாயிருக்கிறான். அசேதநமான குழமணனை அழித்துப் பண்ணியும் ஆபரணம் பூட்டியும் அழகு கண்டு உகக்கிறதோடு சேதநமான கிளியைப் பஞ்ஜரத்தில் வைத்துப் பால் கொடுத்தும் வேண்டினபடி பறக்கவிட்டும் அதின் உகப்புக்கண்டு உகக்கிறதோடு வாசியில்லையிறே நிரபேக்ஷரான ரஸிகர்க்கு.

– ஏதோ ஒரு பலனை அடையும் பொருட்டு ப்ரபத்தியைச் செய்து, அதன் பலனை அனுபவித்தபடி இருப்பவன் ஜீவனே ஆவான். அப்படி உள்ளபோது, ஈச்வரன் எப்படி பலனைப் பெறுகிறான் என்ற சந்தேகத்திற்கு விடை தரப்படுகிறது. அசித்துக்கு உண்டாகும் மாற்றங்கள் போன்று சித் வஸ்துவான ஜீவனுக்குத் தன்னால் தரப்பட்ட புருஷார்த்தங்களால் ஈச்வரன் மகிழ்கிறான். இதன் காரணம் அனைத்தின் எஜமானனாக உள்ளதால் ஆகும். எதனையும் எதிர்பாராத ஒருவனுக்கு – மண்ணைக் குழைத்து, அதில் ஒரு பொம்மை செய்து, அந்தப் பொம்மைக்கு நகைகள் அணிவித்து அழகு பார்த்தல்; உயிருடன் உள்ள கிளியைக் கூண்டில் வைத்து, அதற்கு பால் அளித்து, தனது விருப்பத்தின்படி அதனை விடுவித்தல் – ஆகிய இரண்டு செய்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை.