Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 3)
அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்
பரஸமர்ப்பணத்தை அநுஷ்டிக்கும் முறை
மூலம் – ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் என்று சோதிதமான இவ்வநுஸந்தாந விசேஷத்தை அநுஷ்டிக்கும்படி : சேஷியாய் ஸ்வதந்த்ரனான ஈச்வரன் தன் ப்ரயோஜநமாகவே தானே ரக்ஷிக்கும்படிக்கு ஈடாக அநந்யார்ஹ அநந்யாதீந சேஷ பூதனாய் அத்யந்த பரதந்த்ரனான நான் ஆத்மாபி சாயம் ந மம என்கிறபடியே எனக்குரியேனல்லேன்; ஒன்றை நிரூபாதிகமாக என்னது என்னவும் உரியேனல்லேன்; ஸ்வயம் ம்ருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந: ஸ்வரக்ஷணே அபி அசக்தஸ்ய கோ ஹேது: பரரக்ஷணே என்கிறபடியே என்னையும் என்னதென்று பேர் பெற்றவற்றையும் நானே ஸ்வதந்த்ரனாயும் ப்ரதாநபலியாயும் ரக்ஷித்துக்கொள்ள யோக்யனுமல்லேன்; ஆத்மா ராஜ்யம் தநம் சைவ களத்ரம் வாஹநாநி ச ஏதத் பகவதே ஸர்வம் இதி தத்ப்ரேக்ஷிதம் ஸதா என்று விவேகிகள் அநுஸந்தித்த க்ரமத்திலே என்னுடைய ஆத்மாத்மீயங்களும் அவனதே; ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹி ஆத்ம நிக்ஷேப உச்யதே என்கையால் இவற்றினுடைய ரக்ஷணபரமும் ந ஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம் என்கிறபடியே ஸர்வரக்ஷகனான அவனதே; தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்யவியுக்ததா கேசவார்ப்பண பர்யந்தா ஹி ஆத்மநிக்ஷேப உச்யதே என்கிறபடியே ரக்ஷணபலமும் ப்ரதாந பலியான அவனதே என்று பாவிக்கை.
– சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டதான (ஸாத்வத தந்த்ரம்) ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் – தனது ஆத்மாவை என்னிடம் ஒப்படைக்கவேண்டும் – என்று உள்ளதைக் கடைப்பிடிக்கும் முறையானது இப்போது கூறப்படுகிறது. அந்த மனிதன் தனது மனதிற்குள், “நான் எம்பெருமானை முழுவதுமாக நம்பியுள்ளேன்; நான் அவனது அடிமை, அவனுக்காகவே உள்ளேன்; எனது அடிமைத்தனம் வேறு யாருக்காகவும் இல்லை; நான் வேறு யாரையும் நம்பி இருப்பதில்லை. ஆகவே அனைத்திற்கும் எஜமானனாகவும், எதனையும் சார்ந்து இல்லாமல் உள்ளவனும் ஆகிய எம்பெருமானுக்கு, தனது ப்ரயோஜனத்திற்காகவே என்னைக் காக்கும் பொறுப்பு உள்ளது”, என்று எண்ண வேண்டும். மஹாபாரதம் சாந்திபர்வம் - ஆத்மாபி சாயம் ந மம – எனது ஆத்மா என்னைச் சேர்ந்தது அல்ல – என்று கூறுவது போன்று, எனது ஆத்மாவும் என்னுடையது அல்ல, வேறு எதனையும் என்னுடையது என்று சொந்தம் கொண்டாடவும் எனக்கு உரிமை இல்லை. மஹாபாரதம் சாந்திபர்வம் (294-19) - ஸ்வயம் ம்ருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந: ஸ்வரக்ஷணே அபி அசக்தஸ்ய கோ ஹேது: பரரக்ஷணே – மண்கட்டி போன்று எம்பெருமானை நம்பி இருக்கின்ற ஜீவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறன் அற்றவனாகவே உள்ளான்; இப்படி உள்ளபோது அவனால் மற்றவர்களை எப்படிக் காக்க இயலும் – என்றது. ஆகவே என்னையும் என்னைச் சேர்த்தவர்களையும் எம்பெருமானின் துணையின்றி, சுயமாகக் காப்பாற்றும் திறன் கொண்டவன் அல்லன். மஹாபாரதம் சாந்தி பர்வம் (343-24) - ஆத்மா ராஜ்யம் தநம் சைவ களத்ரம் வாஹநாநி ச ஏதத் பகவதே ஸர்வம் இதி தத்ப்ரேக்ஷிதம் ஸதா – ஆத்மா, ராஜ்யம், செல்வம், மனைவி, வாகனங்கள் போன்ற பலவும் எம்பெருமானுக்காகவே உள்ளன என்று உபரிசரவஸு கூறினான் – என்றது. இப்படியாக அறிஞர்கள் கூறுவது போன்று நானும், எனது என எண்ணப்படும் அனைத்தும் எம்பெருமானுடையதே ஆகும். லக்ஷ்மீ தந்த்ரம் (17-79) - ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹி ஆத்ம நிக்ஷேப உச்யதே – ஆத்மாவையும், ஆத்மாவைச் சேர்ந்தவற்றையும் காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் சமர்ப்பணம் செய்வதே ஆத்மநிக்ஷேபம் எனப்படும் – என்றது. ஆகவே அனைத்தையும் காக்கும் பொறுப்பு, அனைத்தையும் காப்பாற்றும் அவனுடையதே ஆகும். விஷ்ணு புராணம் (1-22-21) - ந ஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம் – அனைவரையும் நியமிக்கும் ஸ்ரீஹரியைத் தவிர, காக்கும் திறன் வேறு யாருக்கும் இல்லை – என்றது காண்க. லக்ஷ்மீ தந்த்ரம் (17-73) - தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்யவியுக்ததா கேசவார்ப்பண பர்யந்தா ஹி ஆத்மநிக்ஷேப உச்யதே – எம்பெருமானால் காக்கப்படும் ஆத்மாவை, பலனில் கூட தனக்கு உரிமையில்லை என்ற துணிச்சலுடன் கேசவனிடம் சமர்ப்பணம் செய்தலே ஆத்மநிக்ஷேபம் ஆகும் – என்றது. இதன்படி சமர்ப்பணம் செய்வதால் உண்டாகும் பலனும் அவனுடையதே என்று எண்ண வேண்டும்.