Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்
அங்கி ஸ்வரூபம்
மூலம் – முமுக்ஷுவான அதிகாரிக்கு இவ்வுபாயத்தில் அங்கிஸ்வரூபமாவது ஆபரணத்தை உடையவனுக்கு அவன் தானே ரக்ஷித்துக் கொண்டு பூணக்கொடுக்குமாப்போலே யதாவஸ்திதமான ஆத்மநிக்ஷேபம். அதாவது ப்ரணவத்தில் ப்ரதமாக்ஷரத்தில் ப்ரக்ருதி ப்ரத்யயங்களாலே ஸர்வரக்ஷகனாய் ஸர்வசேஷியாய்த் தோற்றின ஸர்வேச்வரனைப் பற்ற ஆத்மாத்மீய ரக்ஷணவ்யாபாரத்திலும் ஆத்மாத்மீய ரக்ஷணபலத்திலும் ஸ்வாநீநமாகவும் ஸ்வார்த்தமாகவும் தனக்கு அந்வயமில்லாதபடி பரந்யாஸ ப்ரதாநமான அத்யந்த பாரதந்த்ர்யவிசிஷ்ட்ட சேஷத்வாநுஸந்தான விசேஷம்.
– மோக்ஷத்தில் விருப்பம் உள்ள முமுக்ஷுக்கள் கைக்கொள்ள வேண்டியதான அங்கங்களுடனும் அங்கியுடனும் கூடியதான இந்த உபாயத்தில், அங்கி என்பது தனது ஆத்மாவைச் சமர்ப்பணம் செய்வது ஆகும்; இவ்விதம் சமர்ப்பிக்கும்போது ப்ரபத்தியிலோ அல்லது அதன் பலனிலோ தனக்கு எந்தவிதமான ஸ்வதந்த்ரமும் இல்லை என்று எண்ணியபடியே இருத்தல் வேண்டும். தன்னிடம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வேறு ஒருவனால் கொடுக்கப்பட்ட ஒரு நகையை, மீண்டும் அதன் உரிமையாளரிடம், அவன் அணிந்து மகிழும்விதமாக, பத்திரமாக அளித்தல் என்ற நிலையைப் போன்றே ஆத்மசமர்ப்பணம் செய்யவேண்டும். ப்ரணவத்தின் முதல் எழுத்தான ”அ” என்பதன் மூலம் கூறப்படுபவனும், அனைத்திற்கும் எஜமானனும், அனைத்தையும் காப்பவனும் ஆகிய ஸர்வேச்வரனை முன்னிறுத்தி – தன்னையோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களையோ காக்கும் பொறுப்பைத் தாங்களாகவே எடுக்காமல் இருக்கவேண்டும்; இப்படியாகக் காப்பதன் மூலம் உண்டாகும் பலனில் தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ பற்றில்லாமல் இருத்தல்வேண்டும். இந்த நிலையானது - நாம் எம்பெருமானின் அடிமைகள், அவனை மட்டுமே நம்பி உள்ளோம் என்ற எண்ணங்களுடன் கூடியிருத்தல் ஆகும். இவற்றில் நம்மைக் காப்பாற்றும் பொறுப்பு முழுவதையும் அவனிடம் ஒப்படைத்தல் என்பது விசேஷமாகும்.