Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 30)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

ப்ரக்யாத: பஞ்சஷ அங்க: ஸக்ருத் இதி பகவச்சாஸநை: ஏஷ யோக: தத்ர த்வாப்யாம் அபாயாத் விரதி: அநிதர உபாயதா ஏகேந போத்யா ஏகேந ஸ்வாந்ததார்ட்யம் நிஜ பர விஷயே அந்யேந தத்ஸாத்யதா இச்சா தத்வஜ்ஞாந ப்ரயுக்தா து இஹ ஸபரிகரே தாததீந்ய ஆதி புத்தி:

– பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரபத்தி என்னும் யோகம், ஐந்து அங்கங்கள் கொண்டது மற்றும் ஆறு அங்கங்கள் கொண்டது என்றும், ஒரே ஒருமுறை செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. (மோக்ஷத்தின் பொருட்டுச் செய்யப்படும் ப்ரபத்தியில் ஸாத்த்விக த்யாகம் என்னும் ஓர் அங்கம் ஆறாவதாக உள்ளது. மற்ற பலன்களை எண்ணிச் செய்யப்படும் ப்ரபத்தியில் இந்த அங்கம் கிடையாது. எனவே ஐந்து அல்லது ஆறு என்று கூறப்பட்டது. மேலே உள்ள ச்லோகத்தின் இறுதி வரியில் உள்ள “து” என்னும் சொல், இந்த வேறுபாட்டை விளக்குவதற்காகவே உள்ளது). இந்த அங்கங்களில் – எம்பெருமானின் ஆணையை மீறுதல் என்னும் நிலையை மாற்றுவதாக ஆநுகூல்ய ஸங்கல்பம், ப்ராதிகூல்யவர்ஜநம் ஆகிய இரண்டு அங்கங்கள் உள்ளன; எம்பெருமான் அல்லாமல் வேறு உபாயத்தைப் பற்றாத தன்மையை கார்ப்பண்யம் என்னும் ஓர் அங்கம் அளிக்கிறது; தன்னைக் காப்பாற்றும் விஷயத்தில் வேறு உபாயங்களை நாடாஅமல் இருக்கும் தன்மையை மஹாவிச்வாஸம் உண்டாக்குகிறது; ”ஜீவன் விரும்பும் பலனை நான் அளிக்கிறேன்”, என்னும் எம்பெருமானின் ஸங்கல்பத்தை கோப்த்ருத்வவரணம் ஏற்படுத்துகிறது. இதனை முதலில் அறியவேண்டும். இப்படியாக உள்ள அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியில், இது அனைத்தும் எம்பெருமானாலேயே செய்யப்படுகிறது என்ற எண்ணம், சாஸ்த்ரங்கள் மூலமாக உண்டாகும் உண்மையான ஞானத்தினால் மட்டுமே ஏற்படுகிறது.