Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 25)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

ஆசார்யனின் கடாக்ஷம் மூலமே மஹாவிச்வாசம் உண்டாகிறது

மூலம் – இவ்விசிஷ்டமான புருஷகாராதிகள் அஞ்சையும் ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே தெளிந்தவனுக்கல்லது மஹாவிச்வாஸம் பிறவாது. எங்ஙனேயென்னில் – ஈச்வரன் அபிமுகனல்லாமையாலே கர்மயோகாதிகளுக்கு அநர்ஹனாம்படியான மஹாபராதங்களை உடையவனாய் திகசுசிமவிநீதம் என்கிற ச்லோகத்தின்படியே எட்ட அரிய பலத்தைக் கணிசிக்கும்படியான சாபலத்தையுமுடையனாய் இப்பலத்துக்கு அநுஷ்டிக்கப் புகுகிற உபாயம் காயக்லேச அர்த்தவ்யய காலதைர்த்யாதிகளொன்றும் வேண்டாததொரு ஸக்ருதநுஸந்தாநமாதல், ஸமுதாயஜ்ஞாந பூர்வக ஸக்ருதுக்திமாத்ர மாதலாய், இந்த லகுதரமான உபாயத்தைக் கொண்டு அந்த குருதரமான பலத்தைத் தான் கோலின காலத்திலே பெற ஆசைப்பட்டு இப்பலத்துக்கு சுநமிவ புரோடாச: என்கிறபடியே ஜந்மவ்ருத்தாதிகளாலே தான் அநர்ஹனாய் வைத்துத் தன் அநுபந்திகளையுங்கொண்டு இப்பேறு பெறுவதாக ஒருத்தனுக்கு மஹாவிச்வாஸம் பிறக்கையில் அருமையை நினைந்து கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று என்று எம்பார் அருளிச்செய்தாரிறே.

– புருஷகாரம் முதலான ஐந்தையும் (கடந்த பத்தி காண்க) ஆசார்யனின் கடாக்ஷத்தால் அறிந்து கொள்ளாதவனுக்கு மஹாவிச்வாசம் என்பது உண்டாகாது. இது எப்படி? இப்படிப்பட்டவன் பக்கம் எம்பெருமானின் கடாக்ஷம் திரும்பாத காரணத்தால், இவன் கர்மயோகம் போன்றவற்றுக்கான தகுதிகளை இழக்கும்படியான பாவங்கள் பல நிறைந்தவனாக உள்ளான். இவனுடைய நிலை ஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்னம் (47) – திகசுசிமவிநீதம் – தூய்மை, வெட்கம், தயை போன்றவை இல்லாத என்னை நிந்திக்கவேண்டும் – என்பதாக உள்ளது. ஆக இவன் எட்டுவதற்கு இயலாத ஒன்றை அடைவதற்கு மிகவும் முயற்சித்தபடி உள்ளான். ஆனால் அந்த ஒன்றை அடைவதற்கு இவன் ஒரு சுலபமான உபாயத்தைக் கைக்கொள்கிறான். இந்த உபாயம் – கடுமையான உடல் முயற்சிகள் தேவை அற்றது, பணச் செலவு அற்றது, அதிக நேரமும் எடுத்துக் கொள்ளாதது, மிகவும் எளிமையானது, மனதாலோ வாக்காலோ பொருள் அறிந்து சிலவற்றைக் கூறினாலே போதுமானது ஆகும். இப்படிப்பட்ட உபாயம் மூலம் தான் விரும்பும் அந்த மோக்ஷத்தை, தான் அடைய விரும்பும் நேரத்தில் பெற ஆசை கொள்கிறான். சுநமிவ புரோடாச: - தேவர்களுக்கு அளிக்கப்பட்டதை ஏற்கும் தகுதி நாய்க்கு இல்லை – என்பது போன்று, தனது பிறப்பு மற்றும் பல நடவடிக்கைகளின் காரணமாக, மோக்ஷம் என்பதை அனுபவிக்கும் தகுதி தன்னிடம் இல்லை என்று உணர்கிறான். ஆனாலும் அதனைத் தானும், தன்னைச் சார்ந்தவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று பெரும் ஆவல் கொள்கிறான். இப்படியாக பக்தியோகத்தை அடையவே அச்சம் மற்றும் தயக்கம் கொள்ளும் ஒருவன், ப்ரபத்திக்கு முக்கியமான அங்கமாக உள்ள மஹாவிச்வாசம் கொள்ள எண்ணுதல் என்பதை எம்பார் “கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று” என்று அருளிச் செய்தார். குறிப்பு – கடந்த பத்தியில் கூறப்பட்ட “கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று” என்பதற்கு என்ன பொருள் என்பதைக் காண்போம். ஒரு எண்ணெய் வியாபாரி தனது செக்கு பழுதடைய, அதற்குப் புதிதாக மரம் வெட்டக் கானகம் சென்றான். அப்போது ஒரு மரத்தை வெட்ட முயன்றபோது, அதில் இருந்த பிசாசு ஒன்று, “இதனை வெட்டாதே. உனக்கு எண்ணெய்தானே வேண்டும். அதற்குப் பதிலாக நான் தினமும் உனக்கு எள்ளை மூட்டையாகவே தருகிறேன். அதனை வியாபாரம் செய்வாயாக”, என்றது. இவனும் ஒப்புக்கொள்ள, பிசாசு அன்றாடம் ஒரு மூட்டை எள்ளை அளித்துவந்தது. இந்த நிலையில் அங்கு வந்த மற்றொரு பிசாசு, இதனை அறிந்து, முதல் பிசாசிடம், “நான் சென்று அவனைக் கொன்றுவிடுகிறேன்”, என்று புறப்பட்டது. அந்தப் பிசாசு அவன் வீட்டுக்குச் சென்ற நேரம், அவன் தனது மகனிடம் அடங்காத மாடு ஒன்றைக் கட்டுவதற்காக, “மகனே! அந்த இரண்டாவது பிசாசை பிடித்துக் கட்டு”, என்றான். உடனே இரண்டாவது பிசாசு மிகுந்த அச்சம் கொண்டு அவனிடம் சென்று, “ஐயா! நான் உனக்கு அன்றாடம் எண்ணெயை பாத்திரத்தில் (டின்) அடைத்தே கொடுத்துவிடுகிறேன், என்னை விடுங்கள்”, என்று கூறி ஓடியது. இதனைக் கேள்விப்பட்ட முதல் பிசாசு, ““கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று” என்று சிரித்தது. ஆக முதல் பிசாசின் வேலையைக் காட்டிலும் இரண்டாவது பிசாசுக்குச் சிரமம் அதிகம் என்றானது. இது போன்றே, மஹாவிச்வாஸம் என்பது பக்தியைக் காட்டிலும் சிரமம் என்பதாகும். மேலே உள்ள கதைக்குப் பதிலாக – ஒரு பிடி எள்ளையே கொடுக்க இயலாதவனிடம், ஒரு பாத்திரம் எண்ணெய் கேட்பது போன்று - கர்மயோகத்திலேயே தகுதி இல்லாதவன் மஹாவிச்வாஸம் கொள்ள நினைப்பது உள்ளது – என்றும் சிலர் விளக்கம் கூறுவர்.