Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 16)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
த்வயமும் – ஆநுகூல்ய ஸங்கல்ப, ப்ராதிகூல வர்ஜநங்களும்
மூலம் – இக்கட்டளையெல்லாம் க்ரியாமாணார்த்த ப்ரகாசகமான த்வயாக்யமந்த்ரத்திலே அநுஸந்திக்கும்படி எங்ஙனேயென்னில் – ஸர்வஜ்ஞ ஸர்வ சக்தி யுக்தனாய், கர்மாநுரூப பலப்ரதனாய், ஸர்வோபகார நிரபேக்ஷனாய், க்ஷுத்ர தேவதைகளைப் போலே க்ஷிப்ரகாரியன்றிக்கேயிருப்பானாய், ஸமாதிக தரித்ரனான ஸர்வேச்வரன் அநந்தாபராதங்களையுடையார்க்கு அபிகம்யனாகையும், ப்ராப்தி விரோதியான அநந்தாபராதங்களையுடையார்க்கு அளவில்லாத பலத்தைத் தருகையும், அல்பவ்யாபாரத்துக்குத் தருகையும், தாழாதே தருகையும், தரம் பாராதே தருகையும் கூடுமோவென்கிற சங்கைகளுக்கு நிவர்த்தகங்களுமாய் யதாஸம்பவம் உபாயத்வ ப்ராப்யத்வோபயுக்தங்களுமாய் இருந்துள்ள புருஷகார ஸம்பந்த குண வ்யாபார ப்ரயோஜந விசேஷங்களாகிற சேஷியினுடைய ஆகாரங்களைப் பொதிந்து கொண்டிருக்கிற ஸ்ரீமச்சப்தத்திலும் நாராயண சப்தத்திலும் ஆர்த்தமாக ஆநுகூல்ய ஸங்கல்பமும் ப்ராதிகூல வர்ஜநமும் அநுஸந்தேயமாகக் கடவது. இப்படி விசிஷ்டனான ஸ்வாமியைக் காட்டுகிற சப்தங்கள் ஔசித்யத்தாலே அவன் திறத்தில் ப்ராப்தமான அபிமதாநுவர்த்தன ஸங்கல்பத்தையும் அநபிமத நிவர்த்தனத்தையும் ப்ரகாசிப்பிக்கின்றன.
– ப்ரபத்தி என்னும் செயலின் ஆழ்பொருளை அறிவிக்கும் த்வய மந்திரத்தில், இந்த ஐந்து அங்கங்கள் எப்படி வெளிப்படுகின்றன என்ற கேள்வி எழலாம். அனைத்தும் அறிந்தவன், எங்கும் உள்ளவன், கர்மங்களுக்கு ஏற்ப பலன் அளிப்பவன், வேறு யாருடைய உதவியும் வேண்டாதவன், மற்ற தெய்வங்கள் போன்று உடனடியாகப் பலன் அளிக்காதவன், தனக்கு நிகராகவோ மேலாகவோ யாரும் இல்லாதவன் – இப்படிப்பட்ட ஸர்வேச்வரன் விஷயத்தில் பின்வரும் சந்தேகங்கள் எழலாம்: எல்லையற்ற தவறுகள் இழைத்தவர்களால், இப்படிப்பட்ட எம்பெருமான் நெருங்கக் கூடியவனாக இருப்பானா? பலன்களை அடைவதற்குத் தடையாக எல்லையற்ற தவறுகள் இழைத்தவர்களுக்கு, எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் பலன்களை அளிப்பானா? இத்தகைய பலன்களை அற்பமான கர்மங்களைச் செய்தவர்களுக்கும் அளிப்பானா? இந்தப் பலன்களை தாமதம் செய்யாமல் விரைவாக அளிப்பானா? தன்னை அண்டியவர்களின் ஏற்றத்தாழ்வு பாராமல் இருப்பானா? இப்படிப்பட்ட சந்தேகம் உள்ளவர்கள், எம்பெருமான் கீழே உள்ள விசேஷங்கள் கொண்டவன் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்: பெரியபிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டுள்ளான். எஜமானன் தனது வேலையாள் மீது கொண்டுள்ள உறவுமுறையில் உள்ளான். தனது படைப்புகள் மீது ஆழ்ந்த அன்பு முதலான குணங்கள் கொண்டுள்ளான். அனைத்து உயிர்களையும் கரை சேர்க்கும் எண்ணம் கொண்டுள்ளான். இவற்றைக் கரை ஏற்றுவதைத் தனது பலனாகக் கொண்டுள்ளான். இப்படிப்பட்ட எஜமானத் தன்மைகள் உபாயமாக உள்ளதை த்வயத்தில் உள்ள ஸ்ரீமத் என்ற பதம் மூலமும், அவனை அடைதல் என்பதை த்வயத்தில் உள்ள நாராயண என்ற பதம் மூலமும் காணலாம். ஆனால் ஸர்வேச்வரனுக்கு விருப்பமானதைச் செய்வேன் என்ற எண்ணமும், அவனுக்கு விருப்பம் இல்லாதவற்றைச் செய்யமாட்டேன் என்ற எண்ணமும் இல்லாதவனுக்கு மேலே கூறப்பட்ட விசேஷங்கள் வெளிப்படாது. இப்படியாக அவனது விசேஷங்களை வெளிப்படுத்தும் சொற்கள் - அவனுக்கு விருப்பமானதைச் செய்வதையும், அவனுக்கு விருப்பம் இல்லாதவற்றைத் தவிர்ப்பதையும் – வாக்கியத்தில் உள்ள தங்களின் அமைப்பு மூலம் உணர்த்துகின்றன.