Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 15)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
விபீஷண சரணாகதி
மூலம் – இப்படி மற்றுமுள்ள ப்ரபத்தி ப்ரகரணங்களிலும் லௌகிக த்ரவ்ய நிக்ஷேபங்களிலும் ஸம்க்ஷேப விஸ்தர ப்ரக்ரியையாலே இவ்வர்த்தங்கள் காணலாம். தான் ரக்ஷிக்க மாட்டாதொரு வஸ்துவை ரக்ஷிக்கவல்லனொருவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கும்போது தான் அவன் திறத்தில் அநுகூலாபிஸந்தியையுடையவனாய், ப்ரதிகூலாபிஸந்தியைத் தவிர்ந்து, “இவன் ரக்ஷிக்கவல்லவன், அபேக்ஷித்தால் ரக்ஷிப்பதும் செய்யும்”, என்று தேறி, தான் ரக்ஷித்துக் கொள்ளமாட்டாமையை அறிவித்து, நீ ரக்ஷிக்க வேணுமென்று அபேக்ஷித்து, ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்துத் தான் நிர்பரனாய் பயங்கெட்டு மார்பிலே கைவைத்துக் கொண்டு கிடந்து உறங்கக் காணா நின்றோமிறே.
– இந்த உலகத்தில் லௌகிகமாக ஒருவரின் பொருள்களை மற்றவர்களிடம் வைப்பதிலும், மற்ற ப்ரபத்தி நூல்களிலும் இந்த விஷயங்கள் சுருக்கமாகவும் விரிவாகவும் உள்ளதைக் காணலாம். தனது பொருளைத் தன்னால் பாதுகாக்க இயலாது என்று எண்ணும் ஒருவன், அந்தப் பொருளை “இவனால் பாதுகாக்க இயலும்”, என்று ஆராய்ந்து அவனிடம் செல்கிறான். அப்போது, அந்த மனிதனுக்கு விருப்பமானதை மட்டுமே செய்து, அவனுக்கு விருப்பம் இல்லாதவற்றைத் தவிர்த்து, அவனிடம் பொருளை அளிப்பதைக் காணலாம். மேலும், “இவனே இந்தப் பொருளைக் காக்க இயலும், இவனை வேண்டினால் காப்பதற்கு ஒப்புக்கொள்வான்”, என்று முடிவு செய்து, அவனிடம் சென்று, தன்னால் அந்தப் பொருளைக் காக்க இயலாது என்று தனது இயலாமையைக் கூறுகிறான். அவனிடம், “நீயே காப்பாற்ற வேண்டும்”, என்று விண்ணப்பம் செய்கிறான். பின்னர் காப்பாற்றப்பட வேண்டிய தனது பொருளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, பயம் இல்லாமல், பாரம் இல்லாமல், தனது மார்பிலே கைகளை வைத்து, படுத்து, சுகமாக உறங்குவதைக் காண்கிறோம் அல்லவா?