Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 14)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
விபீஷண சரணாகதி
மூலம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச, பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச என்கிற ஸ்வவாக்யத்தின்படியே அங்குத் துவக்கற்றுப்போருகையாலே ப்ராதிகூல்யவர்ஜந அபிஸந்தி தோற்றிற்று. ராவணோ நாம துர்வ்ருத்த: என்று தொடங்கி ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலும், பின்பும் அநுஜோ ராவணஸ்யாஹம் தேந சாஸ்ம்யவமாநித: பவந்தாம் ஸர்வபூதாநாம் சரண்யம் சரண்யம் கத: என்கையாலும் கார்ப்பண்யம் சொல்லப்பட்டது. அஞ்சாதே வந்துகிட்டி ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே என்று சொல்லும்படி பண்ணின மஹாவிச்வாஸம் விபூஷணோ மஹாப்ராஜ்ஞ: என்று காரணமுகத்தாலே சொல்லப்பட்டது. ப்ராஜ்ஞதையை விசேஷிக்கிற மஹச்சப்தத்தாலே விச்வாஸாதிசயந்தானே விவக்ஷிதமாகவுமாம். ராகவம் சரணம் கத: என்கையாலே உபாயவரணாந்தர்நீதமான கோப்த்ருத்வவரணம் சொல்லிற்றாயிற்று. உபாயவரண சப்தத்தாலே வ்யாஜ்ஜிதமாகிறவளவன்றிக்கே, நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் என்கையாலே கடக புரஸ்ஸரமான ஆத்மநிக்ஷேபம் சொல்லிற்று. இப்ப்ரகணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ர பரமானால் நிஷ்ப்ரயோஜநம்.
– இப்படியாக முடிவு செய்த விபீஷணன் கீழே உள்ளபடி உரைத்தான். இதன் மூலம் இவனது ப்ராதிகூல்யவர்ஜநம் (எம்பெருமானுக்கு விருப்பம் இல்லாதவற்றைத் தவிர்த்தல்) வெளிப்படுகிறது: இராமாயணம் யுத்த காண்டம் (17-14) - த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச – புத்திரன், மனைவி ஆகியவர்களை விட்டு இராமனைச் சரணம் அடைந்தேன். இராமாயணம் யுத்த காண்டம் (19-5) - பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச – இலங்கை, தோழர்கள், செல்வம் ஆகியவற்றைக் கைவிட்டேன். அடுத்து, விபீஷணன் இராமாயணம் யுத்த காண்டம் (17-12) - ராவணோ நாம துர்வ்ருத்த: - இராவணன் தகாத நடவடிக்கைகள் கொண்டவன் – என்று கூறத் தொடங்கி, அனைவரையும் வென்ற இராவணனுடன் கொண்ட விரோதம் காரணமாக, வேறு புகலிடம் இல்லாமல் இருப்பதைக் கூறுகிறான். தொடர்ந்து இராமனிடம், இராமாயணம் யுத்த காண்டம் (19-4) - அநுஜோ ராவணஸ்யாஹம் தேந சாஸ்ம்யவமாநித: பவந்தாம் ஸர்வபூதாநாம் சரண்யம் சரண்யம் கத: - நான் இராவணனின் தம்பி; அவனால் அவமானம் அடைந்தேன்; அனைத்து உயிர்களுக்கும் ரக்ஷகனான உன்னைச் சரணம் அடைந்தேன் – என்றான். இதனால் கார்ப்பண்யம் வெளிப்பட்டது. விபீஷணனிடம் இருந்த மஹாவிச்வாஸம் என்பதே, அவனை யாருக்கும் அஞ்சாமல் இராமாயணம் யுத்த காண்டம் (17-15) - ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே – அனைத்து உலகங்களுக்கும் புகலிடமான இராமனிடம் - என்று கூறுப்படிச் செய்தது. இப்படியாக இவனது மஹாவிச்வாஸத்திற்கான காரணமாக இராமாயணம் யுத்த காண்டம் (19-1) -விபூஷணோ மஹாப்ராஜ்ஞ: - விபீஷணன் மிகுந்த அறிவுள்ளவன் – என்பது கூறப்பட்டது. இங்கு உள்ள “மஹ” என்னும் பதம் “மிகுந்த” என்ற பொருளை அளித்து, அந்தப் பதம் “ஞானம்” என்பதற்கு அடைமொழியாகக் கூறப்பட்டாலும், அதே பதம் விபீஷணனின் விச்வாஸத்தை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். அடுத்து, தன்னைக் காக்க வேண்டும் என்னும் விண்ணப்பத்தை இராமாயணம் யுத்த காண்டம் (17-14) – ராகவம் சரணம் கத: - இராகவனைச் சரணம் அடைந்தேன் – என்ற வரி உணர்த்துகிறது. இதுவே கோப்த்ருத்வவரணம் ஆகும். இந்த வரி மூலம் கோப்த்ருத்வவரணம் மறைமுகமாக உணர்த்தப்பட்டாலும், இராமாயணம் யுத்த காண்டம் (17-15) - நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் – விபீஷணனாகிய என்னை இராமனிடம் ஸமர்ப்பணம் செய்யுங்கள் – என்ற வரி மூலம், சரணாகதியைத் தூண்டுபவர்கள் மூலமாக ஆத்மநிக்ஷேபம் செய்யப்படுவது கூறப்பட்டது. இங்கு உள்ள “நிவேதயத” என்னும் பதத்தை “கூறுங்கள்” என்ற பொருளில் எடுத்துக் கொண்டால், அந்தப் பதம் வெளிப்படுத்துகின்ற “என்னை அவனுக்கு ஸமர்ப்பணம் செய்யுங்கள்” என்னும் பொருள் வெளிப்படாமல் போய்விடும்.