Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 13)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
விபீஷண சரணாகதி
மூலம் - அங்குற்ற அபயப்ரதான ப்ரகரணத்திலும் இவ்வங்க அங்கி வர்க்கம் அடைக்கலாம். எங்ஙனேயென்னில் ப்ராதிகூல்யத்திலே வ்யவஸ்திதனான ராவணனுக்குங் கூடப் ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ, ஸீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வஸேம ராஜந்நிஹ வீதசோகா: என்று ஹிதம் சொல்லுகையாலே ஆநுகூல்யஸங்கல்பம் தோற்றிற்று. இந்த ஹிதவசநம் பித்தோபஹதனுக்குப் பால் கைக்குமாப் போலே அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று. த்வாம் து திக் குல பாம்ஸநம் என்று திக்காரம் பண்ணின பின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது, இவனோடு அநுபந்தித்த விபூதிகளுமாகாது, இவன் இருந்தவிடத்தில் இருக்கவுமாகாதென்று அறுதியிட்டு,
– இராமனால் அபயம் அளிக்கப்பட்ட இடத்திலும் இந்த அங்கம் அங்கிகளைக் காணலாம். எப்படி? இராவணன் தகாதவற்றைச் செய்வதிலேயே குறியாக இருந்தான். அவனுக்கு விபீஷணன் கீழ்க்கண்ட நன்மை பயக்கும் வரிகளைக் கூறினான்: இராமாயணம் யுத்த காண்டம் : (9-22), (9-23), (14-3), (14-4) - ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ – இராமனிடம் சீதையை ஒப்படைப்பாயாக. இராமாயணம் யுத்த காண்டம் (15-14) - ஸீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வஸேம ராஜந்நிஹ வீதசோகா: - சீதையை இராமனிடம் அளித்துவிட்டு, நாம் இந்த இலங்கையில் வருத்தம் அற்றவர்களாக வாழ்வோமாக. மேலே உள்ள வரிகளின் மூலம் ஆநுகூல்யஸங்கல்பம் (எம்பெருமானுக்கு மகிழ்வை ஏற்படுத்தும் செயல்) வெளிப்படுகிறது. பித்தம் கொண்ட ஒருவனுக்கு பால் கசப்பது போன்று, இந்த நன்மை பயக்கும் சொற்கள் இராவணனுக்கு கோபம் ஏற்படக் காரணமான சொற்களாயின. இராவணன் விபீஷணனிடம் இராமாயணம் யுத்த காண்டம் (16-15) - த்வாம் து திக் குல பாம்ஸநம் – நம் அசுர குலத்தை கெடுக்கின்ற உன்னை அவமதிக்கிறேன் – என்றான். இதனைக் கேட்ட விபீஷணன், “இனி இவனுக்கு உபதேசம் செய்ய ஏதும் இல்லை. இவன் தொடர்புடைய எதனையும் அனுபவிப்பது கூடாது, இவன் உள்ள இங்கு இருக்கவும் கூடாது”, என்று முடிவு செய்தான்.