Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 10)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

த்ரிஜடா சரணாகதி நிரூபணம்

மூலம் – இவ்வர்த்தம் பிராட்டியை சரணமாகப் பற்ற வாருங்கள் என்று ஸாத்த்விக ப்ரக்ருதியான த்ரிஜடை ராக்ஷஸிகளுக்குச் சொல்லுகிற வாக்யத்திலும் காணலாம். ததலம் க்ரூ ஸ்வாக்யைர்வ: என்று ப்ராதிகூல்யவர்ஜநம் சொல்லப்பட்டது. ஸாந்த்வமேவாபி தீயதாம் என்கையாலே மந:பூர்வமாகவல்லது வாக்ப்ரவ்ருத்தியில்லாமையாலே ஆநுகூல்ய ஸங்கல்பம் ஆக்ருஷ்டமாயிற்று. ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாமுபஸ்திதம் என்று போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலே அதிகாரமான ஆகிஞ்சந்யமும் அதினுடைய அநுஸந்தாநமுகத்தாலே வந்த கர்வஹாந்யாதிரூபமாய் அங்கமான கார்ப்பண்யமும் சொல்லிற்றாயிற்று. அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் என்கையாலும் இத்தை விவரித்துக் கொண்டு அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம் என்று திருவடி அநுவதிக்கையாலும், பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப் பார்க்கிலும் அவர் சீற்றத்தையாற்றி இவள் ரக்ஷிக்க வல்லவளாகையாலே ரக்ஷிஷ்யதீதி விச்வாஸம் சொல்லப்பட்டது. அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே, பர்த்ஸிதாமபி யாசத்வம் ராக்ஷஸ்ய: கிம் விவக்ஷயா என்கையாலே கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று.

– இப்படிப்பட்ட உயர்ந்த கருத்துக்கள், சிறந்தவளான த்ரிஜடை என்னும் அரக்கி, மற்ற அரக்கிகளிடம், “சீதையைச் சரணம் என்று பற்றுங்கள்”, எனக் கூறுவதன் மூலம் வெளிப்படுகிறது. இதனைக் கீழே உள்ள பல வரிகளில் காணலாம்: இராமாயணம் ஸுந்தரகாண்டம் (27-42) - ததலம் க்ரூ ஸ்வாக்யைர்வ: - உங்கள் கொடிய சொற்களை நிறுத்துங்கள் – என்பதன் மூலம் எம்பெருமானுக்கு ஏற்காதவற்றைத் தள்ளும் ப்ராதிகூல்யவர்ஜநம் சொல்லப்பட்டது. இராமாயணம் ஸுந்தரகாண்டம் (27-42) - ஸாந்த்வமேவாபி தீயதாம் – ஸமாதானம் உண்டாக்கும் சொற்களை மட்டுமே கூறுங்கள் – என்பதன் மூலம் எம்பெருமானுக்கு மகிழ்வை உண்டாக்கும் ஆநுகூல்யஸங்கல்பம் சொல்லப்பட்டது. மனதில் இத்தகைய நிலை உண்டானால் மட்டுமே சொற்கள் இது போன்று வெளிவரும். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (27-45) - ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாமுபஸ்திதம் – இராமன் மூலமாக அரக்கர்களுக்கு கொடிய பயம் உண்டானது – இதன் மூலம் அரக்கர்கள் வேறு கதியில்லாமல் நிற்பது என்ற நிலை கூறப்பட்டதால், இங்கு ஆகிஞ்சந்யம் சொல்லப்பட்டது. இதன் மூலம் கார்ப்பண்யமும் உணர்த்தப்பட்டது. எப்படி என்றால், தங்களது கதியற்ற நிலைய உணர்ந்த அரக்கர்கள் தாங்களாகவே தங்கள் கர்வம் முதலானவற்றைக் கைவிடுவார்கள், இதுவே ஓர் அங்கமான கார்ப்பண்யத்திற்கு இட்டுச் செல்லும். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (27-43) - அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் – அரக்கிகளே! இராமன் மூலமாக உண்டாகும் பயத்திலிருந்த இவள் (சீதை) நம்மைக் காக்கும் சக்தி உடையவள் – என்று கூறப்பட்டது. இதே கருத்தை அனுமன், ஸுந்தரகாண்டம் (58-91) - அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம் – இராகவனிடமிருந்து அரக்கிகளைக் காப்பாற்றும் திறன் உடையவள் இவள் – என்று மீண்டும் கூறியது காண்க. இதன் மூலம் எம்பெருமான் ஒருவனைத் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும், அந்தக் கோபத்தை மாற்றி, கண்டிப்பாகக் காப்பாற்றுவாள் என்னும் மஹாவிச்வாஸம் சொல்லப்பட்டது. இராமாயணம் ஸுந்தரகாண்டம் (27-44) - அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே, பர்த்ஸிதாமபி யாசத்வம் ராக்ஷஸ்ய: கிம் விவக்ஷயா – சீதையிடம் நாம் அபயம் என்று விண்ணப்பம் செய்வோம். இதுவே எனக்கு (த்ரிஜடை) சரியாகப்படுகிறது. உங்களால் அச்சுறுத்தப்பட்டவளாக இருந்தாலும், அவளை நீங்கள் ப்ரார்த்தனை செய்யுங்கள். அவள் காப்பாற்றுவாளோ என்ற ஐயமே அவசியம் இல்லை. அத்தகைய ஐயம் வீணே ஆகும் – என்று உள்ளது. இதன் மூலம் கோப்த்ருத்வ வரணம் கூறப்பட்டது.