Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 4)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

ப்ரபத்தியின் அங்கங்கள்

மூலம் – இவ்விடத்தில் சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்மவிபவாமி யத் புருஷம் பரமுதிச்ய ந மே ஸித்திரித: அந்யதா இதியங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ என்று அஹிர்புத்ந்யோக்தமான பலத்யாகரூப அங்காந்தரம் மோக்ஷார்த்தமான ஆத்மநிக்ஷேபத்திலே நியதம். பல ஸங்க கர்த்ருத்வாதி த்யாகம், கர்மயோகம் முதலாக நிவ்ருத்தி தர்மங்களெல்லாவற்றிலும் வருகையாலே இவ்வநுஸந்தாநம் முமுக்ஷுவுக்கு ஸாங்க ஸமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம்.

– அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை - சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்மவிபவாமி யத் புருஷம் பரமுதிச்ய ந மே ஸித்திரித: அந்யதா இதியங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ – எம்பெருமானிடம் நான் செய்கின்ற ப்ரபத்தி என்பதே உயர்ந்த புருஷார்த்தம், இதனைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பயனாக நான் விரும்பவில்லை, இப்படியாக வேறு எதனையும் விரும்பாமல் உள்ளதே சிறந்த அங்கமாகக் கூறப்படுகிறது, இதற்கு விரோதியாக பலன் மீது கொள்ளும் ஆசை உள்ளது – என்றது. மோக்ஷத்தை அடையும் பொருட்டு ஆத்ம ஸமர்ப்பணம் செய்தல் என்னும் சரணாகதிக்கு, மற்ற பலன்களின் மீது உள்ள பற்றுதல்களைத் தவிர்த்தல் என்பது, அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை கூறுவது போன்று, மிகவும் முக்கியமான அங்கம் ஆகும். பலன்களின் மீது உள்ள பற்றுதல்களைக் கைவிடுதல், கர்மங்களைத் தானே இயற்றுதல் என்ற எண்ணத்தைக் கைவிடுதல் முதலானவை கர்மயோகம் போன்றவற்றில் துறப்பது என்றாகிறது. இதே எண்ணங்கள், மோக்ஷத்தை விரும்பி, எம்பெருமானிடம் அனைத்து அங்கங்களுடன் சரணாகதி செய்யும்போது இருத்தல்வேண்டும்.