Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம்

அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்து உலகும் நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய் வந்து அடையும் வகை வன் தகவு ஏந்தி வருந்திய நம் அந்தம் இல் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே.

– அனைத்திற்கும் காரணமாக உள்ளவனும், அழிவற்றவனும், நம்மைக் காப்பதற்கு எப்போதும் தயாராக நிற்பவனும், நாம் எத்தனை பிழைகள் செய்தாலும் மாறாத கருணை கொண்டவனும் ஆகிய எம்பெருமானைக் குறித்து எம்பெருமானிடமும் ஆசார்யர்களிடமும் மிகுந்த பக்தி கொண்ட நமது ஆசார்யர்கள் தெளிவாக அறிந்து கொண்டனர். இவர்கள் செய்தது என்ன? ஸம்ஸாரத்தில் உழல்கின்ற அந்தணர் முதலாக சண்டாளர் வரை உள்ள அனைவரும் வேறு உபாயங்களை நாட இயலாமல் துவண்டு நிற்கின்ற நிலையில், வேறு பலனையோ வேறு ரக்ஷகனையோ தேடாத வகையில், எம்பெருமானிடம் சரணம் புகும் வழியை நமக்கு உபதேசம் செய்தனர்.