Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம்

ஆகிஞ்சந்யம் – அநந்யகதித்வம் என்பதன் விளக்கம்

மூலம் – இங்கு முமுக்ஷுத்வமுண்டாய் ஸ்வதந்த்ரப்ரபத்திரூப மோக்ஷோபாயவிசேஷ நிஷ்டனுக்கு சாஸ்த்ரஜந்ய ஸம்பந்தஞாநாதிகள் உபாஸகனோடு ஸாதாரணமாயிருக்க விசேஷித்த அதிகாரம் தன்னுடைய ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும். ஆகிஞ்சந்யமாவது உபாயாந்தர ஸாமர்த்யாபாவம். அநந்யகதித்வமாவது ப்ரயோஜநாந்தர வைமுக்யம், சரண்யாந்தர வைமுக்யமாகவுமாம். இது ப்ரயோஜநாந்தர வைமுக்யத்தாலும் அர்த்தஸித்தம். இவ்வர்த்தம் ப்ராஹ்மணம் சிதிகண்டம் ச யாந்சாந்யா தேவதா: ஸ்ம்ருதா: ப்ரதிபுத்தா ந ஸ்வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் இத்யாதிகளிலே கண்டுகொள்வது.

– ஒருவனுக்கு மோக்ஷத்தில் விருப்பம் ஏற்படலாம். இவன் பக்தியோகத்தில் ஈடுபடும் ஒருவனைப் போன்று, ஜீவாத்மா-பரமாத்மா குறித்த வேறுபாடுகளை, சாஸ்த்ரங்கள் மூலமாக அறிந்து கொள்கிறான். இப்படியாக ப்ரபத்தியை இவன் மோக்ஷ உபாயமாகக் கொள்ளும்போது, இவனிடம் ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் மேலும் இரண்டு தகுதிகளாக இருத்தல் வேண்டும். ஆகிஞ்சந்யம் என்றால் மற்ற உபாயங்களில் ஈடுபடத் திறன் இல்லாமை ஆகும். அநந்யகதித்வம் என்றால் மோக்ஷம் தவிர்ந்த மற்ற எதிலும் பற்று கொள்ளாமையும், எம்பெருமான் அல்லாமல் வேறு எதனையும் துணையாகக் கொள்ளாமையும் ஆகும். அநந்யகதித்வத்தில் உள்ள “மற்ற எதிலும் பற்றற்ற தன்மை” என்பது ஆகிஞ்சந்யத்தில் அடக்கமே ஆகும். இதனை மஹாபாரதம் சாந்திபர்வம் (350-36) - ப்ரஹ்மணம் சிதிகண்டம் ச யாந்சாந்யா தேவதா: ஸ்ம்ருதா: ப்ரதிபுத்தா ந ஸ்வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் – சிறந்த அறிவுள்ள முமுக்ஷுக்கள் ப்ரம்மன், ருத்ரன் போன்றவர்களை வணங்குவதில்லை, காரணம் அவர்கள் அளிக்கும் பலன்கள் அற்பமானவை என்று அறிகின்றனர் – என்றது.