Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம்

அதிகாரம், பலன் போன்றவற்றின் விளக்கம்

மூலம் – இப்படி அபிமதபலத்துக்கு உபாயாந்தர நிஸ்ப்ருஹனாய் ந்யாஸவித்யையிலே இழியுமவனுக்கு இவ்வித்தைக்கு அதிகார விசேஷம் முதலானவை இருக்கும்படி அறியவேணும். அதிகாரமாவது – அவ்வோபலோபாயங்களிலே ப்ரவ்ருத்தனாம் புருஷனுக்குப் பலத்தில் அர்த்தித்வமும், உபாயத்தில் ஸாமர்த்யமும். இவற்றில் ஸாமர்த்யமாவது சாஸ்த்ரார்த்தத்தை அறிகையும், அறிந்தபடி அநுஷ்டிக்க வல்லவனாகையும், சாஸ்த்ராநுமத ஜாதி குணாதி யோக்யதையும். இவ்வதிகாரம் முன்பே ஸித்தமாயிருக்கும். இது உடையவனுக்குப் ப்ரயோஜநமாய்க் கொண்டு ஸாத்யமாக அநுவதிக்கப்படுமது பலம். ததர்த்தமாக ஸாத்யமாக விதிக்கப்படுமது உபாயம்.

– ப்ரபத்தி என்னும் ந்யாஸவித்யையில் ஈடுபட விரும்பும் ஒருவன், மற்ற எதனையும் உபாயமாகப் பற்றுவதில் ஆசை கொள்ளாமல் இருக்கும் ஒருவன் எந்தவிதமான தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும் என்பதை அறிய வேண்டும். அதிகாரம் என்றால் – ஒரு பலனை அடையவேண்டும் என்ற விருப்பமும், அந்தப் பலனை அடைவதற்கான உபாயத்தில் உள்ள ஆர்வமும், அந்த உபாயத்தைக் கைக்கொள்ளக் கூடிய திறனும் (ஸாமர்த்யம்) ஆகும். ஸாமர்த்யம் (திறன்) என்றால் – சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட ஆழமான பொருள்களை உணரும் தன்மை, அவற்றை அறிந்த பின்னர் அதன்படி நடத்தல், சாஸ்த்ரங்களில் கூறியபடி ஜாதி, தன்மைகள் முதலானவற்றைக் கொண்டிருத்தல் என்பதாகும். இப்படிப்பட்ட தகுதி உள்ளவனுக்கு உபாயம் மூலம் அடையப்படும் இலக்கு என்பதே பலனாக உள்ளது. உபாயம் என்பது அந்தப் பலனை அடைய வைக்கும் வழியாகும்.