Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 18)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

ப்ரபத்தியும் உட்பிரிவுகள் கொண்டிருத்தல்

மூலம் - உபாஸநத்தில் விசேஷங்கள் போலே சாகாபேதங்களிலும் பகவச்சாஸ்த்ர ஸஹிதா பேதங்களிலும் சொல்லும் ந்யாஸவித்யையில் மந்த்ராதி விசேஷங்களை கண்டு கொள்வது. நமஸ்காரம் வாசிகம் மாநஸம் காயிகமென்று பிரிந்தாற்போலே ப்ரபத்தியிலும் ஓர் ஒன்றை முன்னிட்டு இவ்விபாகங்கள் சொல்லப்பட்டன. இவை மூன்றும் பொருந்தினபோது பூர்ணநமஸ்காரமானாற்போலே பூர்ணப்ரபத்தியாகக் கடவதென்ற வர்கள் பாசுரங்களுக்கும் வாசிக காயிகங்களான வ்யாபாரவிசேஷங்கள் பரீவாஹமாம்படியான மாநஸப்ரபத்தியினுடைய பூர்த்தியிலே தாத்பர்யமாகக் கடவது. யதாதிகாரம் இவையெல்லாம் பலப்ரதங்களென்னுமிடம் முன்பே சொன்னோம்.

– உபாஸனைகளில் பலவிதமான வேறுபாடுகள் உள்ளது போன்று, ந்யாஸவித்யையிலும் சாஸ்த்ரங்கள் மூலமாகப் பலவிதமான மந்த்ர பேதங்கள் கூறப்பட்டுள்ளன. நமஸ்காரம் செய்வதில் வாக்கு, மனம், உடல் ஆகிய வேறுபாடுகள் உள்ளது போன்று ப்ரபத்தியிலும் வேறுபாடுகள் உள்ளன. ப்ரபத்தியில் உள்ள ஈடுபாட்டைப் பொறுத்து இவை அமைகின்றன. நமஸ்காரம் செய்யும்போது மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்று பொருந்தும்போதே முழுமையான நமஸ்காரம் என்று கூறுவது போல, இந்த மூன்றும் பொருந்தினாலே முழுமையான ப்ரபத்தி என்றாகிறது. இந்த வரியை எவ்விதம் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் – மனதளவில் செய்கின்ற ப்ரபத்தி பூர்ணமாக உள்ளது என்றும், இதன் ப்ரதிபலிப்பே உடல் மற்றும் வாக்கு மூலமாக மேலும் வெளிப்படுகிறது என்றும் உணரவேண்டும். இவை அனைத்தும் அவரவர்களின் தகுதியைப் பொறுத்தே அமையும் என்று முன்பே கூறினோம்.