Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 16)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

பக்தியோகம் ப்ரபத்தியின் பலனை அளித்தல்

மூலம் – இப்பக்தியோகம் த்ரைவர்ணிகரையொழிந்தார்க்கும் த்ரைவர்ணிகர் தங்களில் ஞானத்திலேயாதல் சக்தியிலேயாதல் இரண்டிலுமாதல் குறையுடையார்க்கும் பலவிளம்பம் பொறுக்க இசையாத தீவ்ர ஸம்வேகமுடையார்க்கும் யோக்யமல்லாமையாலே தங்கள் அளவுகளைத் தெளிந்து அத்வாரகமாக ப்ரபத்தியை மோக்ஷோபாயமாகப் பற்றுமவர்களுக்கு ஸர்வபலஸாதநமான ப்ரபத்திதானே பரபக்தி ஸ்தாநத்திலே சோதிதையாகையாலே உபாஸகனுக்குப் பரபக்திக்கு மேல் வரும் அவஸ்தைகள் போலே இஸ்ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுடைய கோலுதலுக்கு ஈடாக இப்ப்ரபத்திக்கு மேல் வரும் அநுகூலாவஸ்தைகள் இதின் பலமாயிருக்கும்.

– இந்தப் பக்தியோகம் என்பது மூன்று வர்ணத்தைச் (அந்தணன், க்ஷத்ரியன், வைசியன்) சேராதவர்களால் கடைபிடிக்க இயலாது. இது போன்று மூன்று வர்ணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஞானம் மற்றும் சக்தி ஆகிய இரண்டிலும் குறையுடன் கூடியவர்களால் கடைபிடிக்க இயலாது. இது போன்று, இதன் பலனாகிய மோக்ஷம் என்பதைப் பெறுவதில் உண்டாகும் தாமதத்தைப் பொறுக்க இயலாதவர்களாலும் கடைபிடிக்க இயலாது. ஆக இப்படிப்பட்டவர்களுக்கு ப்ரபத்தியே ஏற்புடையது. ஆக மேலே உள்ளது போன்ற குறைகள் உள்ளவர்களுக்கு அவர்கள் விரும்புகின்ற பலனை அளிக்கவல்லதாக ப்ரபத்தியே பரபக்திக்குப் பதிலாக ஏற்கப்படுகிறது. பரபக்தியை மோக்ஷ சாதனமாகக் கொண்டவனுக்கு, அத்தகைய பரபக்திக்குப் பின்னர் பரஜ்ஞானம் முதலானவை உண்டாகிறது. அது போன்று, ப்ரபத்தியை மட்டுமே மோக்ஷ சாதனமாகக் கொண்டவனுக்கு, அதன் விளைவாக அவன் வேண்டிய பலன்கள் கைகூடுகின்றன.