Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 13)
அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்
பக்தி – பரபக்தி – பரஜ்ஞாந – பரமபக்தி என்றால் என்ன
மூலம் - இத்தாலே சுத்தபாவம் கதோ பக்த்யா சாஸ்ராத் வேதிந ஜநார்த்தநம் என்கிறபடியே சாஸ்த்ரஜந்ய தத்த்வஜ்ஞான கர்மயோகாதி பரம்பரையாலே பிறந்த பரபக்தியானது ஸாக்ஷாத்கரிக்கவேணுமென்னும் அபிநிவேசத்தை உண்டாக்கி யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மாநமவ்யயம், காணுமாறு அருளாய், ஒருநாள் காணவாராய் என்று விலபிக்கும்படி பண்ணி, இவ்வபேக்ஷாமாத்ரமடியாக வந்த பகவத்ப்ரஸாத விசேஷத்தாலே தத்காலநியதமான பரிபூர்ண ஸாக்ஷாத்காரத்தை உண்டாக்கும். இஸ்ஸாக்ஷாத்காரம் பரஜ்ஞானமென்று பேசப்பட்டது.
– மஹாபாரதம் உத்யோகபர்வம் (68-5) - சுத்தபாவம் கதோ பக்த்யா சாஸ்ராத் வேதிந ஜநார்த்தநம் – எம்பெருமான் மற்றும் ஆசார்யன் மீது கொண்ட பக்தி மூலமாக எனது ஸ்வரூபத்தை உணர்ந்தேன்; சாஸ்த்ரம் மூலமாக ஜனார்த்தனனை அறிகிறேன் – என்றது காண்க. இப்படியாக பரபக்தி என்பது சாஸ்த்ரம் மூலமாக உண்டான ஞானயோகம் மற்றும் கர்மயோகம் ஆகியவற்றால் உண்டாகிறது. இது எம்பெருமானைக் காணவேண்டும் என்னும் ஆர்வத்தை மிகவும் அதிகப்படுத்துகிறது. இது ஒரு மனிதனை கீழே உள்ள வரிகளில் உள்ளபடி, எம்பெருமானைக் குறித்து புலம்ப வைக்கிறது: ஸ்ரீமத் பகவத் கீதை (11-4) - யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மாநமவ்யயம் – ஞானம் முதலான குணங்களுக்கு இருப்பிடமாக உள்ள கண்ணா! உன்னை எனக்கு முழுவதுமாகக் காண்பிக்க வேண்டும். திருவாய்மொழி (8-1-1) - காணுமாறு அருளாய் – உன்னை நான் காணும்படி கருணை செய்ய வேண்டும். திருவாய்மொழி (6-9-4), (8-5-1) - ஒருநாள் காணவாராய் – நான் உன்னைக் காணும்படிபடி ஒருநாளாவது என் முன்பாக வரவேண்டும். இப்படிப்பட்ட எல்லையற்ற ஆசையின் காரணமாக எம்பெருமானின் கருணை கிட்டிவிடுகிறது. இதன் பலனாக எம்பெருமான் தனது பரிபூர்ணமான திருவடிவைக் காண்பிக்கிறான். இத்தகைய காட்சியே பரஜ்ஞானம் எனப்படும்.