Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

பக்தியோகம் என்பதன் ஸ்வரூபம்

மூலம் - பக்தியோகமாவது அநந்ய நிஷ்டனாய் அநந்யகதியனாய் அநந்ய சேஷபூதனான பகவானுடைய ஸ்வரூபாதிகளை விஷயமாகவுடைத்தாய் நிரதிசய ப்ரீதிரூபமான த்யானவிசேஷம். அதுதான் தைலதாரை போலே நிரந்தரமான ஸ்ம்ருதிரூபமாய் ஸாக்ஷாத்கார துல்யமான வைசத்யத்தையுடைத்தாய்ப் பரமபதத்துக்குப் ப்ரயாணம் பண்ணும் திவஸமறுதியாக நாள்தோறும் அநுஷ்டிக்க வளர்ந்து வருவதாய் அந்திமப்ரத்யய அவதியான ஜ்ஞாநஸந்ததி விசேஷம்.

– பக்தியோகம் என்பது வேறு எதனையும் எதிர்பாராமல் எம்பெருமானிடம் செலுத்தும் அன்பு என்பதாகும். அந்த எம்பெருமான் தனது எந்தச் செயல்களுக்கும் யாரையும் எதிர்பாராதவன், வேறு யாருடைய கட்டளைக்கும் அடிபணிந்து நடக்க வேண்டிய அவசியம் அற்றவன், வேறு யாருடைய நிர்ப்பந்தம் காரணமாகவும் இல்லாமல் இருப்பவன் ஆவான். இப்படிப்பட்ட எம்பெருமான் மீதும், அவனது ஸ்வரூபங்கள் மீதும் எல்லையற்றதாக உள்ள த்யானம் என்பதே பக்தியோகம் எனப்படும். பக்தி என்பது தெளிந்த ஞானம் எனலாம். இது எண்ணை தடையற்று விழுவது போன்று தடையற்று உள்ளதாகும், நேரடியாகக் காண்பது போன்ற உண்மையாகும், பரமபதம் செல்லும் நாள்வரை ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர்ந்தபடி இருப்பதாகும். உயிர் பிரியும் நேரத்தில் மற்ற நினைவுகளுடன் துண்டிக்கப்படுவதாகும்.