Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

ஞானயோகத்தின் இயல்பு

மூலம் - ஞானயோகமாவது – கர்மயோகத்தாலே அந்தகரணஜயம் பிறந்தவனுக்குப் ப்ரக்ருத்யாதி விலக்ஷணமாய் ஈச்வரனைப் பற்ற ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வங்களாலே சரீரதயா ப்ரகாரமான தன் ஸ்வரூபத்தைப் நிரந்தர சிந்தநம் பண்ணுகை. இக் கர்மயோக ஜ்ஞாநயோகங்களாலே யோகமுகத்தாலே ஆத்மாவலோகநம் பிறந்தால் வைஷயிக ஸுக வைத்ருஷ்ணயாவஹமான ஆத்மாநுபவஸுகமாகிற ஆகர்ஷகத்தில் அகப்பட்டிலனாகில் பரமபுருஷார்த்தமான பகவதநுபவத்துக்கு உபாயமான பக்தியோகத்திலே இழியும்போது உள்ளிருக்கிற ரத்நம் காண்கைக்குக் கிழிச்சீரை கண்டாற்போலே அந்தர்யாமியைப் பார்க்கும்போதைக்கு அவனுடைய சரீரபூதனான ஜீவாத்மாவினுடைய தர்சனம் உபயுக்தமாய்க் கொண்டு பக்தியோகத்துக்கு அதிகாரகோடியிலே ஏறிட்டுக் கிடக்கும்.

– ஞானயோகம் என்பது என்னவென்றால் - கர்மயோகம் மூலம் தனது அந்தகரணத்தை (புத்தி, மனம் போன்றவை) வசப்படுத்தியவன், ப்ரக்ருதியை விட மாறுபட்டதும் எம்பெருமானுக்குச் சரீரமாக உள்ளதும் ஆகிய தனது ஆத்மாவின் ஸ்வரூபத்தைக் குறித்து தொடர்ந்து த்யானம் செய்தபடி இருத்தல் ஆகும். எம்பெருமானால் நியமிக்கப்பட்டும், அவனுக்காகவே உள்ளதும் ஆகையால், ஆத்மாவானது எம்பெருமானின் சரீரமாகவே உள்ளது. ஒருவனுக்கு கர்மயோகம், ஞானயோகம் ஆகியவை மூலமாகத் தனது ஆத்மதரிசனம் கிட்டக்கூடும். உலக விஷயங்களின் மூலம் கிட்டும் சுகங்கள் அனைத்தையும் விரட்டவல்லதான இந்த ஆத்ம அனுபவத்தின் இன்பத்தில், அவன் சிக்காமல் இருக்கவேண்டும். அப்படி இருந்தான் என்றால், அவன் மிகவும் உயர்ந்த புருஷார்த்தமான எம்பெருமானை அடையும் நேரடி வழியான பக்தியோகத்தில் திளைத்து, அதன் மூலம் பகவத் அநுபவம் கிட்டப் பெறுகிறான். இவ்விதம் பக்தியோகத்தில் திளைக்கும்போது, தனது அந்தர்யாமியான எம்பெருமானைத் த்யானித்தபடி உள்ளான்; எம்பெருமானின் சரீரமாக உள்ள தனது ஆத்மாவின் அந்தர்யாமியை எண்ணியபடி உள்ளான். இப்படிப்பட்டவனுக்கு முதலில் ஏற்பட்ட ஆத்ம தரிசனம் எப்படி உதவுகிறது என்றால் – துணியில் கட்டி வைக்கப்பட்ட ரத்னக் கல்லைக் காண்பதற்கு முன்பாக, அந்தத் துணி மூட்டையைக் காண வேண்டும் அல்லவா? இது போன்று தனது ஆத்ம தரிசனம் வாய்க்கப் பெற்ற ஒருவனுக்கு பக்தியோக அதிகாரம் உண்டாகிவிடுகிறது.