Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

கர்மயோகத்தின் இயல்பு

மூலம் - அங்குக் கர்மயோகமாவது – சாஸ்த்ரத்தாலே ஜீவ பரமாத்ம யாதாத்மஜ்ஞாநம் பிறந்தால் தனக்கு சக்யங்களாய் பலஸங்காதி ரஹிதங்களான காம்யகர்மங்களோடும் நித்ய நைமித்திகங்களோடும் கூட ஸநியமமாகப் பரிக்ருஹீதமாயிருக்கும் கர்மவிசேஷம். அதின் அவாந்தரபேதங்கள் தைவமேவாபரே யஜ்ஞம் என்று தொடங்கிச் சொல்லப்பட்ட தேவார்சந தபஸ்தீர்த்த தாந யஜ்ஞாதிகள். அதிகாரி பேதத்தாலே ப்ரபத்திதானே பக்தியை இடையிட்டும் இடையிடாதேயும் மோக்ஷ ஹேதுவானாற்போலே இக்கர்மயோகம் ஜ்ஞாநயோகத்தை இடையிட்டும் இடையிடாதேயும் ஸபரிகரமான யோகத்தைக் கொண்டு ஆத்மாவலோகந ஸாதனமாம்.

– சாஸ்த்ரங்கள் மூலமாக ஜீவாத்மா-பரமாத்மா பற்றிய ஞானம் உண்டாகி, அத்தகைய ஞானம் காரணமாகச் செய்யும் கர்மங்களே கர்மயோகம் எனப்படும். இந்தக் கர்மங்கள் - நித்யகர்மங்கள் (ஸந்த்யாவந்தனம் போன்றவை), நைமித்திக கர்மங்கள் (க்ரஹண கால தர்ப்பணம் போன்றவை) மற்றும் காம்ய கர்மங்கள் (பலனை எதிர்நோக்கிச் செய்யப்படும் கர்மங்கள்) என்று மூன்று வகைப்படும். இவை ஒவ்வொன்றும் அதிகாரியின் இயற்றும் திறனின் அடிப்படையிலேயே உள்ளன. ஸ்ரீமத் பகவத் கீதையில் (4-25) - தைவமேவாபரே யஜ்ஞம் – என்று கூறப்பட்டது போன்று, இந்தக் கர்மங்கள் தெய்வ தரிசனம், தவம் இயற்றுதல், புண்ணிய இடங்களுக்குச் செல்லுதல், தானம் அளித்தல், யாகம் இயற்றுதல் போன்று பலவகைப்படும். ப்ரபத்தி என்பது எவ்விதம் அதனைக் கடைபிடிக்கும் அதிகாரியின் தகுதியைப் பொறுத்து நேரடியாகவோ அல்லது பக்தியை முன்னிறுத்தியோ மோக்ஷம் அளிக்குமோ அது போன்று – கர்மயோகமானது ஞானயோகத்தை முன்னிறுத்தியோ அல்லது தான் மட்டுமோ ஆத்மதரிசனம் உண்டாக்கவல்லதாகும்.