Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

உபாயம் உபேயம்

மூலம் - இவர்களுக்கு கர்த்தவ்யமான உபாயமாவது ஒரு ஜ்ஞாநவிகாஸ விசேஷம். இத்தாலே ஸத்யமாய் ப்ராப்திரூபமான உபேயமாவது ஒரு ஜ்ஞாநவிகாஸ விசேஷம். இவற்றில் உபாயமாகிற ஜ்ஞாந விகாஸ விசேஷம் கரண ஸாபேக்ஷமுமாய் சாஸ்த்ர விஹிதமுமாய் ஸத்யத்வாதிகளான ஸ்வரூபநிரூபகதர்மங்கள் அஞ்சோடே கூடின அவ்வோ வித்யாவிசேஷ ப்ரதிநித்ய குணாதிகளிலே நியதப்ரஹ்ம விஷயமுமாயிருக்கும். உபேயமாகிற ஜ்ஞாநவிகாஸ விசேஷம் கரண நிரபேக்ஷமுமாய் ஸ்வபாவ ப்ராப்தமுமாய் குண விபூத்யாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ணப்ரஹ்ம விஷயமுமாயிருக்கும்.

– முமுக்ஷுக்களால் செய்யவேண்டிய உபாயமானது, ஒரு வகையான ஞான மலர்ச்சி ஆகும். இத்தகைய உபாயம் மூலமாக அடையப்படுகிற வஸ்துவானது (உபேயம்) மற்றொரு வகையான ஞான மலர்ச்சி ஆகும். இவற்றில் உபாயமாக இருக்கின்ற ஞான மலர்ச்சி என்பது இந்த்ரியங்களை எதிர்பார்ப்பதாக உள்ளது என சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இந்த உபாயமானது ஸத்யம் முதலான ஐந்து தன்மைகளுடன் கூடிய ப்ரஹ்மத்தையே இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் தன்மைகள் அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை விளக்குவதாக உள்ளன. பல ப்ரஹ்மவித்யைகளில் கூறப்பட்டுள்ள தன்மைகளுடன் கூடியதாகவும் உள்ளன. ஆனால், உபேய ஞான மலர்ச்சி என்பது ஞான இந்த்ரியங்களின் துணையின்றி இயங்குகிறது. இது ஜீவன்களுக்கு இயற்கையாகவே உள்ளதாக இருக்கும். அனைத்து குணங்களுடனும் விபூதிகளுடனும் கூடிய ப்ரஹ்மத்தை இலக்காகக் கொண்டு இது உள்ளது.