Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 13)

அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்

இருவருக்கும் மோக்ஷம் ஒன்றே

மூலம் - இவனுக்கு இங்கிருந்த காலத்தில் கைங்கர்யத்தில் வைஷம்யம் தன் கோலுதலில் வைஷம்யத்தாலே வந்தது. அது தனக்கு அடி ப்ராரப்த ஸுக்ருத விசேஷம். அந்திம சரீராநந்தரம் பெறும் பேற்றில் ஒரு வைஷம்யமில்லை. பாரதந்த்ரம் ஏகரூபம். “பாரதந்த்ர்யம் பரே பும்ஸி ப்ராப்ய நிர்கத பந்தந: | ஸ்வாதந்த்ர்யமதுலம் ப்ராப்ய தேநைவ ஸஹ மோததே” என்று பலதசையிற் சொல்லுகிற ஸ்வாதந்த்ர்யமும் கர்மவச்யனன்றிக்கே ஸர்வவித கைங்கர்ய யோக்யனாகை என்று பலபாதத்திலே நிர்ணிதம்.

– ப்ரபந்நன் இங்கு வாழும்போது செய்து வரும் கைங்கர்யம் என்பதன் அளவும் முறையும் அவன் எந்த அளவு கைங்கர்யம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறானோ, அதனைப் பொறுத்தே அமையும். அவனுக்கு எந்த அளவு இப்படிப்பட்ட ஆசை உண்டாகிறது என்றால், கடந்த பிறவிகளில் அவன் செய்த புண்ணிய பலன்கள் எந்த அளவு இந்தப் பிறவியில் பலன் தரத் தொடங்கிவிட்டனவோ அந்த அளவே ஆகும். ஆனால் அவன் தனது உடலை விட்ட பின்னர் கிடைக்கவுள்ள பேரானந்தத்தில் எந்தவிதமான வேறுபாடுகளும் இருக்காது. எம்பெருமானை முழுமையாகச் சார்ந்து இருத்தல் என்பது அனைவருக்கும் சமமே ஆகும். இதனை விஷ்ணுதத்வம் - பாரதந்த்ர்யம் பரே பும்ஸி ப்ராப்ய நிர்கத பந்தந: ஸ்வாதந்த்ர்யமதுலம் ப்ராப்ய தேநைவ ஸஹ மோததே – தான் எம்பெருமானைச் சார்ந்தே உள்ளவன் என்பதை அறிந்த ஒருவன், தனது கர்ம பந்தங்களை விடுகிறான், கர்மத்திற்கு வசப்படாத நிலையை அடைகிறான், எம்பெருமானுடன் இருந்து ஆனந்தப்படுகிறான் – என்றது. மோக்ஷம் என்பது எந்தவிதமான கர்மபந்தமும் இன்றி எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்தல் என ப்ரஹ்மஸுத்ரமும் கூறியது காண்க.