Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 10)
அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்
பக்தி ப்ரபத்தி – ஒற்றுமை வேற்றுமைகள்
மூலம் - ஸர்வாதிகாரமாய், ஸர்வ அநிஷ்ட நிவர்த்தநக்ஷமமாய், ஸர்வேஷ்ட ஸாதநமாகவற்றாய், ஸுகரமாய், ஸக்ருத் கர்த்தவ்யமாய், ஆசுகாரியாய், ப்ரதிபந்தாநர்ஹமாய், ப்ரஹ்மாஸ்த்ர பந்தம் போலே ஸ்வபலத்தில் உபாயாந்தர ப்ரயோக அஸஹமாயிருந்துள்ள ப்ரபத்தியைத் தன் அதிகாராநுரூபமாக அத்வாரகமாகப் பற்றினவனுக்குப் பரிபூர்ணாநுபவத்துக்கு வேறு ப்ரதிபந்தகம் இல்லாதபடியாலே ப்ரபத்திக்ஷணம் முதலாக “இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றென்” என்றும், “இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” என்றும், “ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே” என்றும், “ஸ்நேஹோ மே பரமோ ராஜந் வ்யாதி நித்யம் ப்ரதிஷ்டித: பக்திச்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி” என்றும் சொல்லுகிறபடிகளிலே இச்சரீரத்தோடேயிருந்து கைங்கர்யாத்யநுபவம் பண்ண வேணுமென்கிற அபிஸந்திக்குக் காரணமான அர்ச்சாவதாராதி ஸங்கல்பமடியாக வந்த ஸ்வாநுமதியாலே ஸ்தாபிதமான சரீரத்தின் அவஸாநத்தை எல்லையாக உடைத்தாய் தேச கால ஸ்வரூப பரிச்சேதவத்தாய்க் கொண்டு இங்கு உண்டாம் கைங்கர்ய பலோத்கமத்தை முதலாகவுடைத்தான பரிபூர்ண கைங்கர்ய பர்யந்த மோக்ஷம் பலம்.
– மாறாக ப்ரபத்தி என்பது அனைத்து அதிகாரிகளுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது; மோக்ஷம் அடையத் தடையாக உள்ள அனைத்து தடைகளையும் நீக்கிவிடுகிறது; விரும்பினவற்றை அளிக்கவல்லதாக உள்ளது; இயற்றுவதற்கு மிகவும் சுலபமானது; ஒருமுறை செய்தாலே போதுமானது; மிகவும் விரைவாக விரும்பிய பலனை அளிக்கவல்லது; எந்தவிதமான தடைகளாலும் தடுக்கப்பட இயலாதது ஆகும். ப்ரம்மாஸ்திரம் எப்படி குறிப்பிட்ட இலக்கை வீழ்த்தாமல் ஓயாதோ அது போன்று, ப்ரபத்தியும் வேறு எந்தவிதமான உபாயத்தைப் பற்றுவதையும் விரும்பாமல், தானே பலன் அளிக்கவல்லதாகும். இப்படியாக உள்ள ப்ரபத்தியை மோக்ஷ மார்க்கமாக கைக்கொண்டவன், முழுமையான பகவத் அனுபவம் பெற்று, அதனால் ஆன்ந்தத்தில் திளைக்க எந்தவிதமான தடையும் உண்டாவதில்லை. ஆக ப்ரபத்தியைக் கைக்கொண்ட பின்னர், அந்த அதிகாரி மோக்ஷம் பெற எந்தவிதமான தடையும் இல்லை. அவனாக விரும்பும் வரையில், இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு, அவன் விரும்பும்படி அர்ச்சாவதாரத்தில் உள்ள எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்கலாம். இவனுக்கான மோக்ஷ காலம் என்பது இவன் உடலை விடும் காலம்வரை காத்து நிற்கிறது. இந்த உலகில் இவன் உள்ளபோது தொடங்கப்பட்ட கைங்கர்யம் என்பது காலம், இடம், சரீரத் தொடர்பு போன்ற வரம்புகளால் சுருங்கியே உள்ளது. இவன் உடலை விடும் காலத்திம், ப்ரபத்தியானது இவனை வைகுண்டத்தில் ஏற்றி, இவன் முழுமையான கைங்கர்யத்தைத் தொடரும்படிச் செய்து விடுகிறது. மோக்ஷம் பெறும் காலம் வரையில் இந்த உலகில் வாழ்கின்ற ப்ரபன்னர்களின் (ப்ரபத்தி செய்தவர்களின்) நிலை என்ன என்பதைக் கீழே உள்ள வரிகள் கூறுகின்றன: திருவாய்மொழி (8-10-4) - இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றென் – அவனுக்குக் கைங்கர்யம் செய்வதற்கு அவன் அருளிய பின்னர், இந்த உலகில் வாழும்போது என்ன குற்றம் என்னை வந்தடையும்? திருமாலை (2) - இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் சிறிய திருமடல் - ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே – இனிமையான முயல் மாமிஸத்தை விட்டுப் பறக்கும் காக்கையின் மாமிஸத்திற்காக அலைவார்களோ. இராமாயணம் உத்தர காண்டம் (40-15) - ஸ்நேஹோ மே பரமோ ராஜந் வ்யாதி நித்யம் ப்ரதிஷ்டித: பக்திச்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி – அனுமன் இராமனிடம், “அரசனே! எப்போதும் அதிகமாக உள்ள எனது நட்பு என்பது உன்னிடத்தில் அசைக்க இயலாதபடி உள்ளது. இது போன்று உன்னிடம் உள்ள பக்தியும் உறுதியாகவே உள்ளது. இவற்றை விடுத்து எனது மனம் எங்கும் செல்லாது”, என்றான்.