Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்

ஆசார்ய நிஷ்டை என்பதன் விளக்கம்

மூலம் - இவர்களில் ஆசார்யநிஷ்டன் “புத்த்ர: ப்ரேஷ்யஸ்ததா சிஷ்ய இதி ஏவம் ச நிவேதயேத்” என்று சாண்டில்ய ஸ்ம்ருத்யாதிகளிற் சொல்லுகிறபடியே ஆசார்யனுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்திலே தானும் அந்தர்ப்பூதன். “ஸித்திர்பவதி வா நேதி ஸம்சய: அச்யுத ஸேவிநாம் | ந ஸம்சய: அத்ர தத்பக்த பரிசர்யா ரதாத்மநாம்” என்கிற கணக்கிலே ஆசார்யநிஷ்டனுக்குக் கைமுதிக ந்யாயத்தாலே பலஸித்தியில் ஸந்தேஹமில்லை. ஒரு மலையில் நின்றும் ஒரு மலையிலே தாவும் ஸிம்ஹ சரீரத்தில் ஜந்துக்களைப் போலே பாஷ்யகாரர் ஸம்ஸார லங்கனம் பண்ண அவரோடு உண்டான குடல் துவக்காலே நாம் உத்தீர்ணராவுதோமென்று முதலியாண்டான் அருளிச்செய்த பாசுரம். “அந்த: அநந்த ப்ரஹணவசகோ யாதி ரங்கேச யத்வத் பங்குர்நௌகா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந | புங்க்தே போகாநவிதித நிபஸ்ஸேவகஸ்யார்க்ககாதி: த்வத் ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு: ||” என்று ந்யாஸதிலகத்திலே சொன்னோம்.

– உக்திநிஷ்டை, ஆசார்யநிஷ்டை ஆகிய இரண்டில் ஆசார்யநிஷ்டையை அடைந்தவன் நிலை என்ன? சாண்டில்யஸ்ம்ருதி (3-75) - புத்த்ர: ப்ரேஷ்யஸ்ததா சிஷ்ய இதி ஏவம் ச நிவேதயேத் – புத்திரன், தாஸன், சீடன் என்ற வரிசையில் ஸமர்ப்பிக்கவேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஆசார்யநிஷ்டையை அடைந்தவன் ஆசார்யனின் பர ஸமர்ப்பணத்தில் தானும் அடங்கியவனாக உள்ளான். சாண்டில்யஸ்ம்ருதி (1-95) - ஸித்திர்பவதி வா நேதி ஸம்சய: அச்யுத ஸேவிநாம் ந ஸம்சய: அத்ர தத்பக்த பரிசர்யா ரதாத்மநாம் – எம்பெருமானை அடைந்தவர்களுக்கு பலன் கிட்டுமா என்ற ஐயம் உண்டாகலாம், அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வதில் விருப்பம் உள்ளவர்களுக்கு பலன் கிட்டுமா என்ற ஐயமே அவசியம் இல்லை – என்று கூறியது. இதற்கு ஏற்றாப்போல், ஆசார்யனை அடைந்தவர்களுக்குப் பலன் கிட்டுமா அன்ற சந்தேகமே அவசியம் இல்லை (கைமுதிக ந்யாயம் என்றால் தகுதி இல்லாதவனுக்கு அனைத்தும் கிட்டும்போது, தகுதி உள்ளவனுக்குக் கிட்டாதா என்பதாகும்). ஒரு மலையில் உள்ள சிங்கம் மற்றொரு மலைக்குத் தாவும்போது, அதன் உடலில் உள்ள ஈ, கொசு முதலான கிருமிகளும் அதனுடனே சேர்ந்து செல்லும் அல்லவா? எம்பெருமானார் ப்ரபத்தி செய்தபோது, அவருடன் நமக்கு உள்ள காரணமாக, நமக்கும் அந்த ப்ரபத்தி கிட்டிவிட்டது என்று முதலியாண்டான் கூறுவது காண்க. மேலும் ந்யாஸதிலகத்தில் (21) – அந்த: அநந்த ப்ரஹணவசகோ யாதி ரங்கேச யத்வத் பங்குர்நௌகா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந | புங்க்தே போகாநவிதித நிபஸ்ஸேவகஸ்யார்க்ககாதி: த்வத் ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு: - திருவரங்கனே! குருடன் ஒருவன் கண்பார்வை உள்ளவனைப் பிடித்தபடி நடக்கிறான். கால் விளங்காதவன், ஓடம் ஓட்டுபவனால் ஓடத்தில் கொண்டு செல்லப்படுகிறான். அரசனின் வேலையாட்களின் புத்திரர்கள் அரசனை அறியமாட்டார்கள் என்றாலும், போகங்களை அனுபவித்தபடி வாழ்கின்றனர். இது போன்றே கருணை நிரம்பிய ஆசார்யன் உன்னை நான் அடையும்படிச் செய்கிறார் – என்றோம்.