Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்
ப்ரபத்தி வகைகள் – கூரத்தாழ்வான், பட்டர் கூற்றுகள்
மூலம் - இவ்வுக்தி மாத்ர நிஷ்டைனுடையவும் ஆசார்யநிஷ்டைனுடையவும் நிலைகள் இரண்டையும் “தவ பரோ அஹமகாரிஷி தார்மீகை: சரணமித்யபி வாசமுதைரிரம் இதி ஸஸாக்ஷிகயந்நிதமத்ய மாம் குரு பரம் தவ ரங்கதுரந்த”ர என்று சேர்த்து அநுஸந்தித்தார்கள். இதில் மிகுதி காட்டுகிற அபிசப்தத்தாலே ஓரொன்றே அமையுமென்று ஸூசிதமாயிற்று.
– உக்திநிஷ்டை, ஆசார்யநிஷ்டை ஆகிய இரண்டையும் பின்பற்றுபவர்களும் நிலைகள் என்ன என்பதை ஒரே ச்லோகத்திலும் காணலாம். ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-102) - தவ பர: அஹம் அகாரிஷி: தார்மிகை: சரணம் இதி அபி வாசம் உதைரிரம் இதி ஸஸாக்ஷிகயந் இதம் அத்ய மாம் குரு பரம் தவ ரங்கதுரந்தர - ஸ்ரீரங்கநாதா! மிகவும் உன்னதமான திருக்கல்யாண குணங்கள் கொண்ட எனது ஆசார்யர்களால் உனக்கு எற்றவனாக அடியேன் ஆக்கப்பட்டேன். “சரணம் புகுந்தேன்”, என்று அடியேனின் வாய்விட்டுக் கூறினேன். இவற்றையே எனது கைம்முதலாகக் கொண்டு, அடியேனைக் காப்பது என்பது உனது பொறுப்பு என்று செய்து கொள்ளவேண்டும் – என்ற ச்லோகம் காண்க. ச்லோகத்தில் உள்ள அபி என்னும் சொல் மூலம், இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று கரையேற்றும் என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டது.