Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்
ப்ரபத்தி வகைகள் – கூரத்தாழ்வான், பட்டர் கூற்றுகள்
மூலம் - இவற்றில் உக்தியாவது, ஆநுகூல்ய ஸங்கல்பாத்யங்கங்களில் வேசத்யமில்லாதார் அவனையொழியப் போக்கற்று நிற்கிற அதிகாரமும் அபேக்ஷித்தால் ரக்ஷிக்கும் என்கிற விச்வாஸமுமுடையாராய்க் கொண்டு சரண்யன் அறியப் பூர்ண ப்ரபத்தி கர்ப்பமான ஆசார்யோபாதிஷ்ட வாக்யத்தாலே, தாதிமார் சொன்ன பாசுரத்தைச் சொல்லி ஸார்வபௌமனை சரணம் புகும் முக்தரான ஸாமந்தகுமாரர்களைப் போலே, என்னுடைய ரக்ஷை உனக்கே பரமாக ஏறிட்டுக் கொள்ள வேணுமென்கை. பத வாக்யாதி வ்ருத்தாந்தம் அறியாத பாலகன் ஒருகால் பவதி பிக்ஷாம் தேஹி என்றால் ஆடச்யரான ஸத்துக்கள் அகத்திலே அப்போதே அபேக்ஷித ஸித்தி உண்டாமாப் போலே, “கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும்” என்னும்படியிருக்கிற பரிபூர்ண பரமோதார விஷயத்தில் இவ்வுக்திக்கும் பல அவிநாபாவம் உண்டு. அறிவிலிகளாய் இவ்வுக்தி மாத்ரமே பற்றாசானவர்கள் திறத்தில் “யேந கேநாபி ப்ரகாரேண த்வயவக்தா த்வம்” என்று சொல்லுகிறபடியே இவ்வுக்தி மாத்ரமும் உண்டறுக்க மாட்டாது சரண்யரின் க்ருபை. இவ்வர்த்தத்தை “பாபியஸோபி சரணாகதிசப்தமாஜ:” என்றும், “சரணவரணவாகியம் பேதிதா ந பவதி பத ஸாபி தீபூர்விகா” என்றும், “ப்ரபத்திவாசைவ நிரீக்ஷிதும் வ்ருணே” என்றும் அபியுக்தர் பேசினார்கள்.
– இவற்றில் உக்திநிஷ்டை என்பது – ப்ரபத்தி அங்கங்களில் தெளிவான அறிவு இல்லாமை, எம்பெருமானுக்கு எது ஏற்புடையது என்று அறியாமை, இவற்றை அறிந்து கொள்ளக்கூடிய தகுதி பெற்றிருத்தல், அவனைத் தவிர வேறு கதி இல்லாமை (ஆகிஞ்சந்யம்), அவனை அண்டி நின்றால் காப்பாறுவான் என்னும் திடமான நம்பிக்கை (மஹாவிச்வாசம்) ஆகிய தன்மைகள் கொண்டவர்கள், தங்களில் ரக்ஷகனான எம்பெருமான் திருமுன்பாக, தங்கள் ஆசார்யன் தங்களுக்கு என்ன உபதேசிக்கின்றாரோ அதனை மீண்டும் உச்சரிப்பர். இதனை முழுமையான ப்ரபத்தி என்றே ஸர்வேச்வரன் ஏற்றுக் கொள்கிறான். இவர்கள், “என்னைக் காக்கும் முழுப் பொறுப்பும் உன்னுடையதே”, என்று கூறுகின்றனர். அரசனுடன் பகையாக உள்ள அரசகுமாரர்களின் புத்ரர்கள், தங்களுக்குத் தங்கள் செவிலியர்கள் கூறியதைக் கேட்டு அதன்படி அரசனிடம் சரணம் புகுவது போன்ற அரசகுமாரர்களின் புத்ரர்கள் போன்று உள்ளனர். ஒரு ப்ரம்மச்சாரி - பவதி பிக்ஷாம் தேஹி – எனக்கு அன்னம் இடவேண்டும் – என்று தான் கூறும் வாக்யத்திற்குப் பொருள் தெரியாமல் ஒரு வீட்டிற்குச் சென்று உச்சரித்தாலும், அவனுக்கு வேண்டிய அன்னம் அந்த இல்லத்தில் கிட்டிவிடுகிறது. திருவாய்மொழி (3-9-5) - கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் – எத்தனை அளித்தாலும் வற்றாத செல்வம் உடைய ஸர்வேச்வரன், நாம் வேண்டியதை அளிப்பான் – என்று கூறியது காண்க. அவன் பரிபூர்ணமாக, அனைத்தும் நிரம்பியவனாக, தாராள குணத்துடன் கூடியவனாக உள்ளதால், நாம் கூறும் ப்ரபத்தி வரிக்கும் (என்னைக் காக்கும் முழுப் பொறுப்பும் உன்னுடையதே) முழுமையான பலன் கிட்டிவிடுகிறது. அறிவற்றவர்களாக இருந்தாலும், இந்த வரியைக் கூறுவதற்குக்கூட மற்றவர்களைச் சார்ந்து இருந்தாலும், அனைவருக்கும் புகலிடமாக உள்ள ஸர்வேச்வரனால் இந்த ப்ரபத்தியைத் தள்ள இயலாது, அவன் ஏற்றுக் கொள்கிறான். இதன் காரணம் சரணாகதி கத்யம் - யேந கேநாபி ப்ரகாரேண த்வயவக்தா த்வம் – நீ எப்படி இருந்தாலும் த்வய மந்த்ரத்தை உச்சரித்து விட்டாய், ஆகவே உன்னை ரக்ஷிப்பது என் பொறுப்பு – என்று கூறியது அல்லவா? இதனைக் கீழே உள்ள பல வரிகளில், பூர்வாசார்யர்கள் கூறுவது காண்க: அதிமாநுஷஸ்தவம் (61) - பாபியஸோபி சரணாகதிசப்தமாஜ: - மிகுந்த பாவங்கள் செய்தபோதிலும், சரணாகதியை வெளிப்படுத்தும் சொல்லை நான் கூறுகிறேன். இப்படிப்பட்ட என்னை ஒதுக்குவது உனக்கு ஏற்புடையது அல்ல. ஸ்ரீவரதராஜஸ்தவம் (84) - சரணவரணவாகியம் பேதிதா ந பவதி பத ஸாபி தீபூர்விகா – நான் கூறிய சரணாகதி குறித்த சொற்களானவை எனது அறிவாலும், முழு மனதாலும் உணர்ந்து கூறப்படவில்லை. ஆயினும் இதனையும் நீ ஏற்று என்னை ரக்ஷித்தால் மட்டுமே நான் பிழைக்க இயலும். ஸ்ரீவரதராஜஸ்தவம் (92) - ப்ரபத்திவாசைவ நிரீக்ஷிதும் வ்ருணே – பக்தியில்லாதவர்களால் அறிய இயலாத உன்னை, ப்ரபத்தியை வெளிப்படுத்தும் சொற்கள் கொண்டு காண விரும்புகிறேன்.