Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 8.அதிகாரி விபாக அதிகாரம்

இரண்டு வகையான மோக்ஷ அதிகாரிகள்

மூலம் - இப்படி பரமபுருஷார்த்தோபாயங்களான நிவ்ருத்தி தர்மங்களிலே ப்ரவ்ருத்தரான அதிகாரிகள் இருவர். அவர்களாகிறார் அத்வாரக ப்ரபத்தி நிஷ்டனும் ஸத்வாரக ப்ரபத்தி நிஷ்டனும். ஸ்வதந்த்ர அங்க ப்ரபத்திப்யாம் ப்ரபந்நௌ அத்ர தாவுபௌ | பல ஸாதந பக்திப்யாம் பக்தாவபி ச தர்சிதௌ ||

– இப்படியாக கைவிடவேண்டியதைக் கைவிடுதல் என்னும் தர்மவழியில் நிலை நின்று, மோக்ஷம் என்னும் உயர்ந்த புருஷார்த்தத்தை விரும்பும் மனிதர்கள் இருவகை ஆவர். அவர்கள் – அத்வாரக ப்ரபத்தி நிஷ்டர்கள், ஸத்வாரக ப்ரபத்தி நிஷ்டர்கள் ஆவர் (ப்ரபத்தி மூலமாக பக்தியோகத்தைப் பெற்று, அந்த பக்தியோகத்தின் மூலம் மோக்ஷம் பெறுபவர்கள் ஸத்வாரக ப்ரபத்தி நிஷ்டர்கள் ஆவர். ப்ரபத்தி மட்டுமே கைக்கொண்டு, அதன் மூலம் மட்டுமே மோக்ஷம் பெறுபவர்கள் அத்வாரக ப்ரபத்தி நிஷ்டர்கள் ஆவர்). இவர்கள் இருவருமே ப்ரபந்நர்களே – ஒருவர் ப்ரபத்தி என்பதை ஸ்வதந்த்ரமான முயற்சியாகக் கொள்கிறார், மற்றொருவர் ப்ரபத்தியை பக்தியின் அங்கமாகக் கொள்கிறார்; ஒருவருக்கு பக்தி உபாயமாக உள்ளது, மற்றொருவருக்கு பக்தி பலனாக உள்ளது.