Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம்

நின்றபுராணன் அடியிணை ஏந்தும் நெடும்பயனும் பொன்றுதலே நிலை என்றிடப் பொங்கும் பவக்கடலும் நன்று இது தீயது இது என்று நவின்றவர் நல்லருளால் வென்று புலன்களை வீடினை வேண்டும் பெரும்பயனே

– எப்போதும் நிலையாக நிற்கின்ற எம்பெருமானின் பொருந்திய திருவடிகளைத் தனது தலையால் ஏந்தி நின்று, அவனுக்குக் கைங்கர்யம் செய்தலே மோக்ஷம் என்னும் உயர்ந்த புருஷார்த்தம்; அழிவது என்பதையே இயல்பாக உடையதும், ஓங்கி வளர்வதும் ஆகிய ஸம்ஸாரம் என்னும் ஸமுத்ரம் – இந்த இரண்டில் மோக்ஷம் என்பது நன்மை, ஸம்ஸாரம் என்பது தீமை – என்று ஒருவன் அறியக்கூடும். இதனை அவன் எப்படி அறிகிறான் என்றால், சிறந்த ஆசார்யர்கள் மூலமே ஆகும். இப்படிப்பட்ட ஆசார்யர்களின் கருணை காரணமாக அவன் தனது இந்த்ரியங்களை வென்று, மிகவும் உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷம் என்பதை மட்டுமே விரும்பி நிற்பான்.