Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம்

உலக விஷயங்களில் உள்ள தோஷங்களும் பகவத் விஷயத்தின் மேன்மையும்

மூலம் - கீழ்ச்சொன்னபடியிலே பராவரங்களான தத்வங்களும் புருஷார்த்தங்களும் தெளிந்தாலும், இப்படி வைராக்யபூர்வகமாக பரம புருஷார்த்தோபாய அநுஷ்டாநத்தில் ப்ரவர்த்தியானாகில்”சீல வ்ருத்த பலம் ச்ருதம்”, “சமார்த்தம் ஸர்வசாஸ்த்ராணி விஹிதாநி மநீஷிபி: | தஸ்மாத் ஸ ஸர்வசாஸ்த்ரஜ்ஞோ யஸ்ய சாந்தம் மந: ஸதா” என்கிற ச்ருதபலத்தையும் இழந்து, “நாச்சாதயதி கௌபீநம் ந தம்ச மசகாபஹம் | சுந: புச்சமிவாநர்த்தம் பாண்டித்யம் தர்மி வர்ஜிதம்” என்கிறபடியே ஹாஸ்யனாம். ஆகையால் “வயஸ: கர்மணோ அர்த்தஸ்ய ச்ருதஸ்யாபிஜநஸ்ய ச | வேஷவாக்வ்ருத்தி ஸாருப்யமாசரந் விசரேதிஹ” என்கிறபடியே ச்ருதாநுரூபமாக ஸ்வோசிதமான பரம புருஷார்த்தோபாயநுஷ்டாநத்திலே த்வரிக்குமவர்கள் “தன் கருமஞ்செய்யப் பிறருகந்தார்” என்கிறபடியே, “தம் தேவா ப்ரஹ்மாணம் விது:”, “ப்ரணமந்தி தேவதா:” இத்யாதிகளிற் சொல்லும் ஏற்றம் பெறுவர்கள்.

– எது உயர்ந்த தத்துவம், எது தாழ்ந்த தத்துவம் என்றோ; எது உயர்ந்த புருஷார்த்தம், எது தாழ்ந்த புருஷார்த்தம் என்று ஒருவன் அறிந்து கொள்ளக்கூடும். ஆயினும் அவன் தனது வாழ்வின் உயர்ந்த புருஷார்த்தத்தை அளிக்கவல்ல உபாயத்தை அறிந்து, அதனைப் பின்பற்றவில்லை என்றால் என்ன நிகழும் என்றால் – மஹாபாரதம் ஸபாபர்வம் (5-117) - சீல வ்ருத்த பலம் ச்ருதம் – சாஸ்த்ரத்தை அறிவதன் மூலம் ஏற்படும் ஞானத்தின் பலன்கள் ஆத்மகுணங்களும் சிறந்த ஒழுக்கமும் – என்று கூறப்படும் பலனை இழக்க நேரிடும். மேலும் இதிஹாஸ ஸமுச்சயம் (12-37) - சமார்த்தம் ஸர்வசாஸ்த்ராணி விஹிதாநி மநீஷிபி: தஸ்மாத் ஸ ஸர்வசாஸ்த்ரஜ்ஞோ யஸ்ய சாந்தம் மந: ஸதா – மனதை வசப்படுத்தும் பொருட்டே பல சாஸ்த்ரங்களும் ஞானம் உள்ளவர்களால் இயற்றப்பட்டது, ஆகவே யார் ஒருவனின் மனம் அடக்கப்பட்டுள்ளதோ அவன் அனைத்து சாஸ்த்ரங்களும் அறிந்தவன் – என்று கூறப்படும் கருத்தையும் இழந்தவன் ஆகிறான். இது தவிர - நாச்சாதயதி கௌபீநம் ந தம்ச மசகாபஹம் சுந: புச்சமிவாநர்த்தம் பாண்டித்யம் தர்மி வர்ஜிதம் – நாயின் வால் என்பது மறைக்க வேண்டிய இடத்தை மறைப்பதில்லை, நாயை மொய்க்கும் ஈ முதலானவற்றை விரட்டவும் பயன்படுவதில்லை – என்பதற்கு ஏற்ப, அவனது ஞானம் அவனுக்குப் பயன்படாமல் போகின்றது. ஆகவே மநு ஸ்ம்ருதி (4-18) - வயஸ: கர்மணோ அர்த்தஸ்ய ச்ருதஸ்யாபிஜநஸ்ய ச வேஷவாக்வ்ருத்தி ஸாருப்யமாசரந் விசரேதிஹ – வயது, கடைபிடிக்க வேண்டிய கர்மம், கர்மபலன், சாஸ்த்ர ஞானம், உயர்ந்த குலத்தில் பிறவி ஆகியவற்றுக்கு ஏற்ப ஒருவன் தனது பேச்சு, செயல் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப நடக்க வேண்டும். இப்படியாக உயர்ந்த புருஷார்த்தத்தைப் பெற்றுத் தரவல்ல உபாயத்தைக் கடைபிடித்து நடப்பவர்கள் பெறும் ஏற்றத்தைக் கீழே உள்ள வரிகளில் காணலாம்: தன் கருமஞ்செய்யப் பிறருகந்தார் – தனது கடமைகளைச் செய்யும் ஒருவன் அனைவராலும் புகழப்படுகிறான்; மஹாபாரதம் சாந்திபர்வம் (118-11) - தம் தேவா ப்ரஹ்மாணம் விது: - சிறந்த ஒழுக்கம் உள்ள சண்டாளன் தேவர்களால் அந்தணன் என்றே கொள்ளப்படுகிறான்; ஸ்ரீவிஷ்ணுதர்மம் (43-28) - ப்ரணமந்தி தேவதா: - அவனைத் தேவர்கள் வணங்கி நிற்கின்றனர்.