Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம் (பத்தி 3)
அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம்
திருமந்த்ரத்தின் மூலம் அஹங்காரம் முதலானவை அழிதல்
மூலம் - ஸர்வாபேக்ஷித ஸங்க்ரஹமான திருமந்த்ரத்தைக் கொண்டு ஸாரதமார்த்தங்களை அநுஸந்திக்கும்போது, (1) ப்ரதமபதத்தில் த்ருதீயாக்ஷரத்தாலே ப்ரதிபந்நமான ஞானத்வாத்யநுஸந்தானத்தாலே தேஹ ததநுபந்திகளில் வரும் அஹங்கார மமகாரங்களையும், (2) ப்ரதமாக்ஷரத்தில் லுப்த சதுர்த்தியாலே ப்ரதிபந்நமான தாதர்த்யத்தாலே தேஹாதிரிக்த ஆத்மஸ்வரூப ததுகுணங்களில் த்வம் மே அஹம் மே என்கிற ச்லோகத்தின்படியே தனக்குரிமையுண்டாக நினைக்கிற அஹங்கார மமகாரங்களையும், (3) மத்யமாக்ஷரத்தில் அவதாரணார்த்தத்தாலே அந்யசேஷபூதோ அஹம் என்றும் மமாந்ய: சேஷி என்றும் வரும் அஹங்கார மமகாரங்களையும், (4) மத்யமபதத்தில் ப்ரதிபந்நமான நிஷேதவிசேஷத்தாலே ஸ்வரக்ஷணவ்யாபாரத்தைப் பற்ற வரும் நிரபேக்ஷஸ்வாதந்த்ர்ய நிரூபாதிக சேஷித்வாபிமானரூபங்களான அஹங்கார மமகாரங்களையும், (5) இந்நிஷேத ஸாமர்த்யந்தன்னாலே த்ருதீயபதத்தில் சதுர்த்தியாலே அபிப்ரேதமாய் பாவியான கைங்கர்யபர்யந்தாநுபவமாகிற பலத்தைப் பற்ற இப்போது பலாந்தராநுபவ ந்யாயத்தாலே வரும் ஸ்வாதீநகர்த்ருத்வ போக்த்ருத்வ ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ ப்ரமரூபங்களான அஹங்கார மமகாரங்களையும் யதா யோக்யம் ஆர்த்தமாகவும் சப்தமாகவும் அடியறுத்து இப்படி ஸ்திரப்ரதிஷ்ட ஞானராய்
– அறியவேண்டிய அனைத்தின் ஸாரமாக உள்ள திருமந்த்ரத்தின் மூலமாக அறியவேண்டிய தத்துவங்களை முழுவதுமாக அறிகிறான். இவையாவன: (1) திருமந்த்ரத்தின் முதல் பதமான ஓம் என்பதன் மூன்றாம் எழுத்தான “ம” என்பதன் மூலம், ஆத்மா என்பது ஞானஸ்வரூபமானது என அறிகிறான். இதன் மூலமாக “இந்த உடலே நான்” என்னும் அஹங்காரத்தையும், “இவை என்னுடையவை” என்று உடல் மூலமாகத் தோன்றும் மமகாரத்தையும் கைவிடுகிறான். (2) திருமந்த்ரத்தின் முதல் பதமான ஓம் என்பதன் முதல் எழுத்தான “அ” என்பதில் நான்காம் வேற்றுமை நீக்கப்பட்டதன் மூலம் ஜீவன் ஈச்வரனுக்காகவே உள்ளான் என்பதை உணர்கிறான். இதன் மூலம் ஸ்வாமி பராசர பட்டர் அருளிச்செய்த திருமஞ்சனக் கட்டிய ச்லோகத்தில் நம்பெருமாள் ஜீவனிடம், “நீ என்னுடையவன்”, என்னும்போது ஜீவன் அவனிடம், “அல்ல, நான் என்னுடையவன்”, என்று மறுப்பது போன்ற வாசகங்களை எண்ணிப்பார்க்கிறான். இது போன்று “தான் தனக்கே உரிமையானவன்”, என்னும் அஹங்காரம் மற்றும் மமகாரம் ஆகியவற்றைக் கைவிடுகிறான். (3) திருமந்த்ரத்தின் முதல் பதமான ஓம் என்பதன் நடு எழுத்தான “உ” என்பதன் மூலம் “மட்டுமே” என்பது வெளிப்படுகிறது. இதனைக் கொண்டு “நான் எம்பெருமானைத் தவிர உள்ள மற்றவர்களுக்கு அடிமை” என்பதில் உள்ள அஹங்காரம், “எம்பெருமானை விடுத்து வேறு யாரோ எனக்கு எஜமானன்” என்பதில் உள்ள மமகாரம் ஆகியவற்றைக் கைவிடுகிறான். (4) திருமந்த்ரத்தின் நடு பதமான நமோ (ந மம – நான் என்னுடையவன் அல்லன்) என்பதன் மூலம் ஜீவனுக்கு ஸ்வதந்த்ரம் என்று ஏதும் இல்லை என அறிகிறான். இதன் மூலம், “என்னைக் காப்பாற்றிக் கொள்வதில் நான் சுதந்திரமானவன்” என்பதில் வெளிப்படும் அஹங்காரம், “இவ்விதம் என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் செயலானது முழுவதுமாக என்னைச் சார்ந்ததே” என்பதில் வெளிப்படும் மமகாரம் ஆகியவற்றைக் கைவிடுகிறான். (5) இப்படியாக உள்ள நமோ என்பதன் மூலம் ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்று அங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்தல் வரை உள்ள பலன்களின் பொருட்டு உண்டாகும் விபரீத எண்ணங்களை மாற்றிக் கொள்கிறான். இந்த எண்ணங்கள் எவை என்றால்: அஹங்காரம் – “நான் சுதந்திரமானவன்”, “என்னை யாரும் அனுபவிக்க இயலாது”; மமகாரம் – “இதனை நான் எனக்காகச் செய்கிறேன்”, “இதனை நானே அனுபவிப்பேன்” – போன்றவை ஆகும்.