Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 7.முமுக்ஷுத்வ அதிகாரம்

ஜீவன் வேறு, உடல் வேறு, ஈச்வரன் வேறு என்று ஏன் அறிய வேண்டும்

மூலம் - இப்படி இவ்வர்த்தங்களை அத்யாத்ம சாஸ்த்ரங்களாலே தெளிந்து ஸ்வயம் ப்ரகாசாத்வ ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ சரீரித்வ அணுத்வ நித்யத்வ நிரவயவத்வ ச்சேதந தஹந க்லேதந சோஷணாத்யநர்ஹத்வ வ்ருத்திஹ்ரஸா ரஹித ஸ்வரூபத்வாதிகளாலே ஆத்மாவுக்கு விசேஷணபூத தேஹேந்த்ரியாதி வைலக்ஷண்யத்தைக் கண்டு, இவனுடைய பரலோககமந தேஹாந்தரப்ராப்தி யோக்யத்வநிச்சயத்தாலே ஸாமாந்யேந லோகோத்தீர்ண புருஷார்த்தயோக்யராய், நரக பதநாதி ஜந்மாந்தர க்லேசங்களுக்கு அஞ்சி அவற்றின் காரணங்களான கர்மங்களினின்றும் நிவ்ருத்தராய், ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வ அல்பசக்தித்வ அணுத்வ அஜ்ஞான ஸம்சய விபர்யய துக்காதியோக்யத்வ அசுபாச்ரயத் வாதிகளாலே உண்டான விசேஷ்யபூத ஈச்வர வ்யாவ்ருத்திநிச்சயத்தாலே பகவத் கைங்கர்யரூபமான ஸ்வரூப ப்ராப்த வைபவத்தை அபேக்ஷிக்கைக்கு யோக்யராய்,

– இப்படியாக ஆத்மாவைப் பற்றிக் கூறுகின்ற சாஸ்த்ரங்கள் மூலமாக ஒருவன் மேலே கூறப்பட்ட பலவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும். ஆத்மா தானகவே ப்ரகாசிக்கக் கூடியவன், அனைத்தையும் அறியவல்லவன், செயல்களைச் செய்பவன், அனுபவிப்பவன், இந்த உடலை இவைகளுக்குத் துணையாகக் கொண்டவன் என்று அறிய வேண்டும். ஆத்மா என்பது அணு அளவே; அழியாமல் எப்போதும் உள்ளது; உடல் உறுப்புகள் அற்றது; இதனை அறுக்கவோ, எரிக்கவோ, காயப்படுத்தவோ, உலர வைக்கவோ அல்லது வேறு எந்த வகையிலும் மாற்றவோ இயலாது என்று அறியவேண்டும். மேலும் ஆத்மா சுருங்குவதோ விரிவதோ இல்லை. இப்படியாக உள்ள தன்மைகள் மூலமாக ஆத்மாவானது உடலை விட்டு மாறுபட்டு நிற்கிறது. இத்தகைய ஆத்மாவானது வேறு உடலையோ அல்லது வேறு உலகத்திற்குச் சென்று அங்கு வேறு உடலையோ எடுக்கவல்லது என்று அறியும் ஒருவன், இந்த உலகில் காணப்படும் பலன்களைக் காட்டிலும் வேறு உயர்ந்த பலன்கள் இருக்கின்றன என்று அறிகிறான். அவன் நரகத்தில் விழுந்து படும் துன்பங்களை எண்ணியும், அடுத்த பிறவியை எடுத்தால் படக்கூடிய துன்பங்களை எண்ணியும், அந்தத் துன்பங்களை உண்டாக்கவல்ல பாவங்களை உண்டாக்கும் செயல்களைத் தவிர்க்கிறான். தான் ஈச்வரனால் காக்கப்பட்டும் நியமிக்கப்பட்டும் உள்ளபோதிலும் தான் மிகவும் அற்பமானவன், அறியாமையால் சூழப்பட்டவன், சந்தேகம் நிரம்பியவன், பிழைகள் செய்பவன், துன்பத்தில் உள்ளவன், அசுத்தங்களின் இருப்பிடமாக உள்ளவன் என்று அறிகிறான். தனது ஆத்மாவானது ஈச்வரனின் சரீரமாக உள்ளபோதிலும், ஈச்வரன் இந்த தோஷங்களுக்கு எதிர்தட்டாக உள்ளதை உணர்கிறான். இதனால் தான் ஈச்வரனை விட வேறுபட்டவன் என்று அறிகிறான். இந்த ஞானம் காரணமாக எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து அதனால் புகழ் பெறும் தகுதியை அடைந்துவிடுகிறான்.