Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 34)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
வாதியர் மன்னும் தருக்கச் செருக்கின் மறைகுலையச் சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித்தனியே ஆதி எனாவகை ஆரணதேசிகர் சாற்றினர் – நம் போதமரும் திருமாதுடன் நின்ற புராணனையே
– தவறான வாதம் செய்பவர்கள் தங்களிடம் ஸ்திரமாக நிலைத்து நிற்கும் தர்க்கம் செய்யும் திறன் காரணமாகச் செய்ய முயன்றது என்னவெனில் – வேதங்கள் நடுங்குபடியாக, எம்பெருமானின் அடியார்கள் நடுங்கும்படியாக, அவரவர்கள் எண்ணியபடி சிவன், ப்ரம்மன் முதலானோர்களே இந்த உலகின் காரணம் என்று கூற முற்பட்டனர். ஆனால் அவர்கள் அவ்விதம் கூற இயலாதபடி வேதாந்த சாஸ்த்ர நிபுணர்களான நமது ஆசார்யர்கள் செய்தது என்ன? தாமரை மலரில் அமர்ந்துள்ள பெரிய பிராட்டியின் நாயகனான நிற்கும் ஆதி புருஷனான நாராயணனையே இந்த உலகின் காரணம் என்று நிரூபித்தனர்.