Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 32)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

திவ்யதம்பதிகளே அனைத்துமாக உள்ளனர்

மூலம் – இவ்வர்த்தத்தை “தேவதா பாரமார்த்யம் ச யதாவத்வேத்ஸ்யதே பவாந்”, “புலஸ்த்யேந யதுக்தம் தே ஸர்வமேதத்பவிஷ்யதி” என்று புலஸ்த்ய வஸிஷ்ட வரப்ரஸாதத்தாலே பரதேவதாபாரமார்த்ய ஞானமுடையனாய், பெரியமுதலியார் “தஸ்மை நமோ முநிவராய பராசராய” என்று ஆதரிக்கும்படியான ஸ்ரீபராசரப்ரஹ்மர்ஷி பரக்கப்பேசி “தேவ திர்யங் மநுஷ்யேஷு புந்நாம பகவாந் ஹரி: | ஸ்த்ரீநாம்நி லக்ஷ்மீமைத்ரேய நாநயோர்வித்யதே பரம்” என்று பரமரஹஸ்ய யோக்யனான ஸச்சிஷ்யனுக்கு உபதேசித்தான்.

– இந்த உயர்ந்த தத்துவத்தை, உயர்ந்த ரஹஸ்யங்களைப் பெறும் தகுதியை உடைய தனது சிஷ்யனுக்கு பராசரமஹரிஷி உபதேசம் செய்தார். இதனை விஷ்ணு புராணம் (1-8-35) – தேவ திர்யங் மநுஷ்யேஷு புந்நாம பகவாந் ஹரி: ஸ்த்ரீநாம்நி லக்ஷ்மீமைத்ரேய நாநயோர்வித்யதே பரம் - மைத்ரேயரே! தேவர்கள், விலங்குகள், மனிதர்கள் என்றுள்ள பலவற்றில் ஆண்வர்க்கம் அனைத்தும் எம்பெருமானுக்கும், பெண்வர்க்கம் அனைத்தும் மஹாலக்ஷ்மிக்கும் அடங்கியவை ஆகும் – என்றார். இந்தப் பராசர மஹரிஷி எம்பெருமானைப் பற்றிய ஞானத்தை புலஸ்த்யர் மூலமாகவும், வசிஷ்டர் மூலமாகவும் பெற்றார். இவரைப் புலஸ்த்யர் (விஷ்ணு புராணம் : 1-1-26) - தேவதா பாரமார்த்யம் ச யதாவத்வேத்ஸ்யதே பவாந் – பரதேவதையை பற்றிய உண்மையை நீ அறிவாயாக – என்றும், வசிஷ்டர் (புராணம் : 1-1-26) - புலஸ்த்யேந யதுக்தம் தே ஸர்வமேதத்பவிஷ்யதி – புலஸ்த்யர் உனக்கு அருளிய அனைத்தும் கைகூடும் – என்றும் அருளினர். இவரை ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் (4) - தஸ்மை நமோ முநிவராய பராசராய – முனிவர்களில் உயர்ந்தவரான பராசர முனிவரை நான் வணங்குகிறேன் – என்று வணங்கினார்.