Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 31)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

திவ்யதம்பதிகளே அனைத்துமாக உள்ளனர்

மூலம் - தைத்திரீயத்தில் ஸ்ரீய:பதித்வ சிஹ்நத்தாலே மஹாபுருஷனுக்கு வ்யாவ்ருத்தி ஓதினபடியே நினைத்துத் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று உபக்ரமித்துச் “சார்வு நமக்கு” என்கிற பாட்டிலே ப்ரதிபுத்தரான நமக்குப் பெரிய பிராட்டியாருடனே இருந்து என்றும் ஒக்கப் பரிமாறுகிற இவனையொழிய ப்ராப்யாந்தரமும் சரண்யாந்தரமுமில்லை. இத்தம்பதிகளே ப்ராப்யரும் சரண்யரும் என்று நிகமிக்கப்பட்டது.

– தைத்திரீய உபநிஷத்தில் மஹாலக்ஷ்மியின் நாயகனே உயர்ந்த தத்துவம் என்று முழங்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மற்ற தெய்வங்களிடம் நாராயணனை வேற்றுமைபடுத்தி மூன்றாம் திருவந்தாதியில் (1) - திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – என்று ஆழ்வார் அருளிச்செய்தார். இப்படியாகத் தொடங்கிய ஆழ்வார், மூன்றாம் திருவந்தாதியில் (100) - சார்வு நமக்கு – என்று நிறைவு செய்தார். இப்படியாக இந்த இறுதிப் பாசுரத்தின் மூலம் பெரிய பிராட்டியுடன் எப்போதும் நிற்கும் இவனே நமக்கு இலக்கும், சரணமடையும் இடமும் ஆவான் என்று அருளிச்செய்தார்.