Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 30)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
அவனுக்கு மட்டுமே அடிமையாக உள்ளதும், மற்ற தேவதைகளைக் கைவிடுவதும்
மூலம் - இவர் “பாருருவி நீரெரிகால்” என்கிற பாட்டிலே பரிசேஷக்ரமத்தாலே விவாதவிஷயமான மூவரை நிறுத்தி அவர்கள் மூவரிலும் ப்ரமாணாநுஸந்தாநத்தாலே இருவரைக் கழித்துப் பரிசேஷித்த பரஞ்ஜ்யோதிஸ்ஸான ஒருவனை “முகிலுருவம் எம் அடிகளுருவம்” என்று நிஷ்கர்ஷித்தார். இந்த ரூபவிசேஷத்தையுடைய பரமபுருஷனே ஸர்வவேத ப்ரதிபாத்யமான பரதத்த்வமென்னும் இடத்தை ஸர்வவேத ஸார பூத ப்ரணவ ப்ரதி பாத்யதையாலே “மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில்” என்று பெரியாழ்வார் அருளிச்செய்தார்.
– திருநெடுந்தாண்டகம் (2) - பாருருவி நீரெரிகால் – பூமி, நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றைப் படைத்தபின் – என்று தொடங்கும் பாசுரத்தில், அனைவராலும் பரவலாக ஆராயப்படும் மூன்று மூர்த்திகளையும் தன் முன்பாக நிறுத்துகிறார். பல ப்ரமாணங்களை உதவியுடன் இந்த மூவரில் இரண்டு மூர்த்திகளைத் தள்ளுகிறார். மீதம் உள்ள உயர்ந்த ஜோதியான நாராயணனை, திருநெடுந்தாண்டகம் (2) - முகிலுருவம் எம் அடிகளுருவம் – மேகம் போன்ற நிறம் கொண்ட என் நாராயணன் – என்றார். பெரியாழ்வாரும் இப்படியாக மேகம் போன்ற நிறமும் உருவும் கொண்டவனே உயர்ந்த தத்துவம் என்று வேதங்கள் முழங்குவதாகக் கூறுகிறார். இதனை தனது திருமொழியில் (4-5-4) - மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் – அனைத்து வேதங்களுக்கும் மூலமாக உள்ள ஓர் எழுத்தான, மூன்று மாத்திரை அளவுள்ள ப்ரணவத்தை யாருக்கும் கேட்காதபடி ஜபித்து, கடல் போன்ற நிறம் கொண்ட எம்பெருமானைத் த்யானம் செய்தால் – என்றார்.