Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 28)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

நாராயணனே உயர்ந்த தெய்வம் என்று எண்ணாதவனுக்கு அவனைத் தவிர தன்னைக் காக்க யாரும் இல்லை என்னும் எண்ணம் ஏற்படாது

மூலம் - இத்தேவதா விசேஷ நிச்சயமுடையவனுக்கல்லது “கண்ணன் கண்ணல்லதில்லையோர் கண்ணே” என்றும், “களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்”, என்றும், “ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்” என்றும், “தருதுயரம் தடாயேல்” என்கிற திருமொழி முதலானவற்றிலும் சொல்லும் அநந்ய சரணத்வாவஸ்தை கிடையாது.

– நாராயணன் மட்டுமே தங்களைக் காக்கவல்லவன் என்னும் நிலையானது ஆழ்வார்களின் பாசுரங்களில் பின்வருமாறு வெளிப்படுகின்றன: திருவாய்மொழி (2-2-1) - கண்ணன் கண்ணல்லதில்லையோர் கண்ணே – கண்ணன் அல்லாமல் ரக்ஷகன் வேறு யாரும் இல்லை. திருவாய்மொழி (5-8-8) - களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் – நீ என் துன்பங்களை நீக்கினாலும் சரி, நீக்காவிட்டாலும் சரி, உன்னை அல்லாமல் அவற்றைப் போக்கவல்லவர் யாரும் இல்லை. திருவாய்மொழி (10-10-3) - ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் – உன்னை அல்லாமல் எனது ஆத்மாவுக்குப் பற்றுக்கொம்பு கிடையாது. பெருமாள் திருமொழி (5-1) - தருதுயரம் தடாயேல் – என் கர்மங்களுக்கு ஏற்றபடி எனக்கு உண்டாகும் துன்பங்களை நீ தடுக்காவிட்டால்.... இப்படிப்பட்ட நிலையானது நாராயணனே உயர்ந்த தெய்வம் என்று கொள்ளாத வர்களுக்கு ஏற்படாது.